111 வயது வரை நான் உயிருடன் இருக்க காரணம் கோழி மூளையை சாப்பிடுவதால் தான் – ஆஸ்திரேலிய முதியவர்!
கோழி மூளையை தொடர்ந்து சாப்பிடுவதால் தான் நீண்ட ஆயுளுடன் இருப்பதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த 111 வயது முதியவர் டெக்ஸ்டர் க்ரூகர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 111 வயதுடைய முதியவர் தான் டெக்ஸ்டர் க்ரூகர். இவர் தனது நீண்ட ஆயுளுக்கான ரகசியத்தை கூறும்பொழுது, பலரும் ஆச்சரியப்படும் விதமாக இருந்துள்ளது. கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வரக்கூடிய 111 வயதுடைய டெக்ஸ்டர் க்ரூகர், தான் இத்தனை காலம் வாழ்வதற்கான காரணம் கோழியின் மூளையை சாப்பிடுவது தான் எனக் கூறியுள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், கோழியின் தலையில் இருக்கக்கூடிய அந்த சிறிய அளவு முளையை தொடர்ந்து தான் சமைத்து சாப்பிட்டு வருவதாகவும், இதனால் தான் நீண்ட ஆயுளுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவரது மகன் கிரேஜ் கிரேடிட்ஸ் என்பவர் கூறுகையில், தன்னுடைய தந்தையின் வழியை பின்பற்றி வருவதால் தான் தானும் 74 ஆண்டுகள் வரை ஆரோக்கியமாக வாழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவில் தற்பொழுது அதிக வயதுடன் வாழக்கூடிய முதியவர் டெக்ஸ்டர் தான் என ஆசியாவிலுள்ள புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் மெலனி கல்வெர்ட் அவர்களும் கூறியுள்ளார்.