அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்கும் வடகொரியா.! கிம் ஜாங் உன் அதிரடி உத்தரவு.!
சென்னை: அணு ஆயுத உற்பத்தி மற்றும் சோதனையை வடகொரியா அரசு அதிகரித்து வருகிறது.
ராணுவம், பாதுகாப்பு, அணு ஆயுதம் என உலக நாடுகள் உற்றுநோக்கும் வகையில் அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது வடகொரியா. அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் வழிகாட்டுதலின் பெயரின் ஏற்கனவே 2023 மார்ச் மாதம் முதல் ‘ஹெயில்’ எனும் கடலுக்கு அடியிலான அணுஆயுத சோதனையை அந்நாட்டு அரசு மேற்கொண்டது. இனி அணு ஆயுத சோதனையை மேற்கொள்ள கூடாது என ஐநா கூறியும் தங்கள் அணு ஆயுத சோதனையை அந்நாட்டு அரசு மேற்கொண்டுதான் வருகிறது.
அந்நாட்டு செய்தி நிறுவனம் KCNA செய்தி குறிப்பின்படி , நேற்று (வெள்ளி கிழமை) வடகொரிய ராணுவத்தின் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சோதனையை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையிட்டார் என குறிப்பிட்டுள்ளது.
வடகொரிய ஆயுதத் தொழிற்சாலைக்கு சென்றிருந்த கிம், அங்கு, எதிரி நாட்டு அணு ஆயுதத்தை தடுக்கும் வகையிலான ஆயுதத்தை உருவாக்க கூறினார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், வடகொரியாவின் இந்த அணு ஆயுத சோதனைகளை கண்டு எதிரிகள் பயப்படுவார்கள் என்றும் கிம் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இதனை அடுத்து, வட கொரியா, தங்கள் நாட்டு எல்லைக்கு உட்பட்ட கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள கடலை நோக்கி குறுகிய தூர ஏவுகணைகளை ஏவியது என்றும், தென் கொரிய இராணுவம் கூறியது. இந்த வெற்றிகரமான சோதனையை கண்டு வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் திருப்தி அடைந்ததாகவும் KCNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.