உருமாறிய கொரோனா வைரஸ் 53 நாடுகளில் பரவியுள்ளது – உலக சுகாதார அமைப்பு!
இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது 53 நாடுகளில் காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்திற்கான உலகளாவிய தொற்றுநோய் குறித்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உலக அளவில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், புதிதாக 41 லட்சம் பேருக்கு மட்டுமே இந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 84 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு முந்தைய வாரத்தில் ஒப்பிடுகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 14 சதவீதமும் உயிரிழந்தவர்கள் 2 சதவீதமும் குறைவாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியாவில் கடந்த வாரத்தில் 18 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாக கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது அதற்கு முந்தைய வாரத்தில் ஒப்பிடுகையில் 23 சதவீதம் குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் ஆன பி.1.617 வகை கொரோனா வைரஸ் தற்போது உலக அளவில் 53 நாடுகளுக்கு பரவி உள்ளதாகவும், இந்த வைரஸ் தற்பொழுது பி.1.617.1, பி.1.617.2, பி.1.617.3 வகைகளாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.