தமிழரின் முக்கிய திருநாளாம் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
தமிழ் புத்தாண்டு உலகில் உள்ள அனைத்து தமிழர்களால் கொண்டாடப்படும் திருநாளாகும். புத்தாண்டு என்பது சாதி, மத, இன, பேதம் இல்லாமல் தமிழர்கள் என்ற ஓற்றுமை உணர்வுடன் தமிழர்கள் அனைவரும் கொண்டாடபடும் முக்கிய திருநாளாகும்.
இந்த திருநாளின் முதல்நாள் வீடு வாசலை சுத்தம் செய்து வீட்டை அலங்கரிபார்கள் தமிழர்கள்.புத்தாண்டு ஆண்டு காலையில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, புத்தாண்டு அன்று அதிகாலையில் பூஜையில் வைத்து வழிபாடு செய்வார்கள்.
புத்தாண்டன்று காலையில் குளித்து விட்டு வாசலுக்கு கோலமிட்டு புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று தமிழர்கள் வழிபடுவது வழக்கம். புத்தாண்டை முன்னிட்டு வீட்டில் பலகாரங்களை செய்து புத்தாண்டு தினத்தில் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள மக்களுக்கு பலகாரம் கொடுப்பது வழக்கம்.
வாழ்க்கை என்பது கசப்பும் இனிப்பும் சேர்ந்து கலந்தது தான் என்பதை நினைவில் வைத்து இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும்.
புத்தாண்டு தினத்தில் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் ஆசி பெற்று, குறித்த சுபவேளைகளில் கைவிசேடம் அல்லது கைமுழுத்தம் பெறுவர். மூத்தவர்களால் இளையவர்களுக்கு, புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கப்படும் பணமே கைவிசேடம் என்று சொல்ல படுகிறது.
புத்தாண்டு தினத்தில் போர்த்தேங்காய் உடைத்தல், வழுக்கு மரம் ஏறல் , யானைக்குக் கண் வைத்தல், கிளித்தட்டு, ஊஞ்சலாடல், முட்டி உடைத்தல், வசந்தனாட்டம், மகிடிக்கூத்து, நாட்டுக்கூத்து பாரம்பரிய இலங்கையில் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் புத்தாண்டுக் கலையாடல்கள் ஆகும்.