சுகாதாரத்துறை பெரும் சவால்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது -டெல்லி முதல்வர்!
கொரோனாவின் பாதிப்பு டெல்லியில் நாளுக்கு நாள் டெல்லியில் அதிகரித்துக் கொண்டே வருவதால் மாநில சுகாதாரத்துறை பெரும் சவால்களை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தனது வீரியத்தை அதிகரித்துள்ள நிலையில், தற்போது இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநில அரசுகளும் இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் டெல்லியில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே வருகிற 6 நாட்களுக்கு டெல்லி முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், டெல்லி தற்பொழுது கொரோனாவின் நான்காம் அலையை எதிர்கொள்வதாக கூறியுள்ளார்.ஒரு நாளில் மட்டுமே 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் மாநில சுகாதாரத்துறை பெரும் சவால்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அதனை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க ஊரடங்கை தவிர வேறு வழி இல்லை எனவும், இன்று இரவு 10 மணி முதல் ஏப்ரல் 26ஆம் தேதி காலை 6 மணி வரையிலும் டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் ஊரடங்கை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆறு நாள் ஊரடங்கு மிகச்சிறிய அளவிலானதுதான். எனவே டெல்லியை விட்டு மக்கள் வெளியேற வேண்டாம் எனவும், மேலும் இந்த ஊரடங்கு நீட்டிகை வேண்டிய அவசியம் இருக்காது என தெரிவித்துள்ள அவர், அரசு உங்களை கவனித்துக் கொள்ளும் எனவும் மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.