படமாகும் பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்.!நடிப்பது யார் தெரியுமா.?
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு படமொன்று உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய திரையுலகில் தற்போது பலரின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகி வெற்றி பெற்று வருகிறது.சமீபத்தில் கூட தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகும்.மேலும் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.
அதே போன்று விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மாதவன் நடித்து வருகிறார் என்பதும், அனைவரும் அறிந்ததே.அதே போன்று பாலிவுட்டிலும் பல பயோபிக்குகள் உருவாகி வருகிறது.அதில் தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாறு படமான ‘சபாஷ் மித்து’ என்ற படத்தில் டாப்ஸி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்ததாக பாலிவுட்டில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் ஒன்று உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.’ஏக் அவுர் நரேன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்ட நிர்பயாவின் கதையை படமாக இயக்கிய வங்காள மொழி இயக்குனரான மிலன் பௌமிக் உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் நரேந்திர மோடி வேடத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகரான கஜேந்திர சௌஹான் நடிக்க உள்ளாராம் .இவர் மகாபாரத தொடரில் யுதிஷ்டிரர் வேடத்தில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் நரேந்திர மோடியின் பயோபிக் இந்தி மொழியில் உருவாக்க உள்ளதாகவும் , இந்த படத்தினை கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.