கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் சுமந்து சென்ற மருமகள்…!
அசாம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாமனாரை, மருமகள் முதுகில் தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக கொரோனா உலகையே உலுக்கி வருகின்ற நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டாலே பயந்து ஓடக் கூடிய சூழல் தான் தற்போது உள்ளது. அந்த வகையில் பெற்ற தாய் தந்தை என்று கூட பாராமல், குப்பையை போல தூக்கி எறிந்து விட்டு செல்லும் இந்த காலகட்டத்தில், அசாம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாமனாரை, மருமகள் முதுகில் தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
அசாம் மாநிலம் ராஹாவில் உள்ள பாட்டிகவானில் வசித்து வரும் துலேஷ்வர் தாஸுக்கு வயது 75. நிகாரிகாவின் கணவரும், துலேஷ்வரின் மகனுமான சூரஜ் வேலை விஷயமாக வெளியூர் சென்றுள்ளார். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இவரை, அவரது மருமகளான நிகாரிகா முதுகில் சுமந்து சென்று, ராஹா மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
இதனைதொடர்ந்து, மருமகள் நிகாரிகாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. உள்ளூர் அதிகாரிகள் மாமனார் துலேஷ்வர் தாஸை மாவட்ட கோவிட் மருத்துவ மையத்துக்கு அனுப்புமாறு தெரிவித்தனர். மேலும் மருமகள் நிகாரிகா வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தனர். ஆனால் மருமகள் நிகாரிகாவுக்கு மாமனாரை தனியே விட்டுச் செல்ல மனமில்லை.
டாக்டர் சங்கீதா தார் மற்றும் சுகாதாரப் பணியாளர் பின்ட்டு ஹீரா இருவரும், மாமனார் மற்றும் மருமகளுக்கு முதல்கட்ட சிகிச்சைகளை மேற்கொண்டு, பின் அங்குள்ள கொரோனா சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனையில் அனுமதித்தனர். நிகாரிகாவின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.