“காங்கிரஸ் கட்சி எப்போதும் விவசாயிகளுக்கு எதிரானது”- மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்!
ராகுல் காந்தி பேசுவதை காங்கிரஸ் கட்சியே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனவும், காங்கிரஸ் கட்சி எப்போதும் விவசாயிகளுக்கு எதிரானது என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.
அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம், உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவருகின்றனர். இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டு வரும் நிலையில், விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. மேலும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்பி பெற எதிர்க்கட்சிகள் உட்பட பல அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், கிசான் மஸ்தூர் சங்கத்தைச் சேர்ந்த 60 பேர், மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்து பேசியதாகவும், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர்கள் கூறியதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரிடம் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி குடியரசு தலைவரிடம் ராகுல் காந்தி மனு கொடுத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ராகுல் காந்தி பேசுவதை காங்கிரஸ் கட்சியே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனவும், காங்கிரஸ் கட்சி எப்போதும் விவசாயிகளுக்கு எதிரானது என கூறினார்.