கூகுள் மேப் பரிதாபங்கள்..!வழி தவறி வேறு மண்டபத்திற்குச் சென்ற மாப்பிள்ளை…!
இந்தோனேசியாவில்,திருமணத்தன்று மாப்பிள்ளை ஒருவர் கூகுள் மேப்பால் வழிதவறி வேறொரு திருமண மண்டபத்திற்கு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில்,இளைஞர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாவா தீவில் திருமண ஏற்பாடு செய்யப்படிருந்தது.திருமண நாளன்று மாப்பிளை வீட்டார் அனைவரும் மண்டபத்திற்கு கார் மற்றும் வேனில் கூகுள் மேப் உதவியுடன் சென்றுள்ளனர்.
அப்போது,வந்து சேர வேண்டிய இடமாக ஒரு மண்டபத்தை கூகுள் மேப் காட்டியுள்ளது.உடனே அனைவரும் இறங்கி மண்டபத்தினுள் சென்றனர்.மாப்பிள்ளை யார் என்று பார்க்காமல் தடபுடலான வரவேற்பை அங்கு இருந்தவர்கள் கொடுத்தனர்.
ஆனால்,அங்கு வேறொரு மணமகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.அதன் பின்னர்தான்,ஜாவா தீவில் இரண்டு மண்டபங்கள் அடுத்தடுத்த தெருவில் இருந்ததனால் கூகுள் மேப் தவறான வழியைக் காட்டியுள்ளது என்று மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, மாப்பிள்ளையும் அவரது பெற்றோரும் அவர்களிடம் மன்னிப்பு கோரினர்,பின் அவர்களிடமே சரியான திருமண மண்டபத்தின் முகவரியை கேட்டு சென்றுள்ளனர்.இதனால் மண்டபத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போதுள்ள அதிநவீன தொழில்நுட்பங்களானது நம் வாழ்க்கையை எளிதாக்கி இருந்தாலும்,பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதை முழுமையாக நம்பியிருப்பது மக்களுக்கு தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நிருபணமாகிறது.