கலை கட்டிய குற்றாலம் சீசன் – அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்!
குற்றால சீசன் தொடங்கி சுமார் ஒன்றரை மாதத்திற்கு பின் சீசன் கலை கட்டத் தொடங்கியுள்ளது. அனைத்து அருவிகளிலும் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தென் தமிழகத்தில் முக்கியம் வாய்ந்த அருவிகளில் முதன்மையானது குற்றாலம் அருவி. கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கும் போது தமிழகத்தில் குற்றால சீசனும் தொடங்கும்.ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஆனால், இந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாததால் குற்றாலத்தில் அருவிகளில் நீர் வர தாமதமானது. பின்னர் தாமதமாக அருவிகளில் நீர் வந்த நிலையிலும் போதுமான அளவில் விழுக்காததால் சுற்றுலா பயணிகள் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் முதல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது, இதனால் அனைத்து அருவிகளிலும் நீரின் வரத்து அதிகரித்தது. குற்றாலம் சீசனும் தற்போது கலை கட்ட தொடங்கியுள்ளது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது. குற்றாலத்தில் இருக்கும் மெயின் அருவி . ஐந்தருவி , பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் அதிகளவு நீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
அருவிகளில் விழும் நீரின் அளவு குறைந்ததும் குளிக்க அனுமதிக்கபடுகிறார்கள்.இன்னும் இரண்டு மாதங்கள் குற்றால சீசன் நீடிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.