தனது பதவியை ராஜினாமா செய்த அமெரிக்க ‘கேபிடல்’ காவல்துறை தலைவர்.!
அமெரிக்கா நாடாளுமன்ற கட்டிடத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து கேபிடல் காவல்துறை தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, கேபிடல் காவல்துறை தலைவர் ஸ்டீவன் சுண்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில், வருகின்ற ஜனவரி 20-ஆம் தேதி அவர் அதிபராக பதவியேற்கவுள்ளார்.
நேற்று பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்புக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்திருந்தனர். அதில், ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்றதை அடுத்து, இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றுதல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது, நாடாளுமன்ற கட்டத்தை ட்ரம்பின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர்.
ட்ரம்பின் ஆதரவாளர்களை, காவல்துறை தடுத்து நிறுத்தும்போது மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் காயமடைந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு முன்பாக பாதுகாப்பிற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற கட்டிடத்தில் நுழைந்த ட்ரம்பின் ஆதரவாளர்களை தடுக்க கேபிடல் காவல்துறையினர் தவறியதாக குற்றச்சாட்டப்பட்டதை அடித்து, இந்த விமர்சனத்துக்கு பொறுப்பேற்று அமெரிக்க கேபிடல் காவல்துறை தலைவர் ஸ்டீவன் சுண்ட் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதேபோல் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வெள்ளைமாளிகை அதிகாரிகள் பலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.