எனது அருமை நண்பர் மோடிக்கு நன்றி -இஸ்ரேல் பிரதமர் ட்வீட்
ஹைட்ரோக்சி குளோரோகுயின் மருந்துகளை அனுப்பியதற்கு இஸ்ரேல் பிரதமர் இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தடுப்பு மருந்தாக ஹைட்ரோக்சி குளோரோகுயின் மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என அமெரிக்கா அறிவித்தது.இதனையடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும்,மருத்துவ ஊழியர்கள் கொரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ரோக்சி குளோரோகுயின் எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்தன.
எனவே இந்த அறிவிப்பை அடுத்து ஹைட்ரோக்சி குளோரோகுயின் மருந்துகளின் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்த தடைகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசினார் . அந்த உரையாடலில், இருநாடுகளில் நிலவும் கொரோனா நிலவரம் குறித்தும் இருவரும் விவாதித்தனர். மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய பிரதமர் மோடியிடம், இந்தியா ஹைட்ரோக்சி குளோரோகுயின் மருந்துக்கு விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி தடைக்கு அமெரிக்காவுக்கு விலக்கு அளிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார். இதற்கு, பரிசீலித்து உரிய முடிவெடுப்பதாக மோடி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் பின் இதுகுறித்து வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், மோடியிடம் பேசுகையில் அமெரிக்க பொருள்கள் வெளிவருவதற்கு அனுமதித்ததற்கு நன்றி தெரிவித்தேன். அதேபோல், அவர்கள் மருந்துப் பொருள்கள் வெளி வருவதற்கு உதவவில்லை என்றால், அமெரிக்காவிற்கு ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால், நிச்சயமாக இதற்கு ஒரு பதிலடி இருக்கலாம்” என்று கூறினார். இவரின் இந்த பேச்சு உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
எனினும் ட்ரம்ப் பேசிய சில மணி நேரங்களில்,கொரோனா அச்சுறுத்தல் தற்போது உள்ள சூழ்நிலையில், மனிதநேய அடிப்படையில், மருந்தை தேவையான அளவு, நம்மை சார்ந்துள்ள அண்டை நாடுகளுக்கு, தேவைப்படும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்குவது என இந்தியா முடிவு செய்தது.
இதனையடுத்து இந்த மருந்தை எங்கள் நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்தார்.பின் இந்த மருந்து இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,இஸ்ரேலுக்கு மருந்துகளை அனுப்பிய எனது அருமை நண்பர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. இஸ்ரேல் நாட்டின் அனைத்து குடிமக்கள் சார்பாகவும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Thank you, my dear friend @narendramodi, Prime Minister of India, for sending Chloroquine to Israel.
All the citizens of Israel thank you! ???????????????? pic.twitter.com/HdASKYzcK4
— PM of Israel (@IsraeliPM) April 9, 2020