ரஷ்யாவிலுள்ள கொரோனா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து – 3 நோயாளிகள் உயிரிழப்பு!
- ரஷ்யாவில் உள்ள ரியாசான் நகரில் உள்ள கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
- இந்த தீ விபத்தில் அங்கு சிகிச்சை பெற்று வந்த 3 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவில் உள்ள மேற்கு பகுதியான ரியாசான் நகரில் உள்ள ஒரு மிகப் பெரிய மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. தீயை அணைக்க முயற்சிப்பதற்குள் தீ கட்டுக்கடங்காமல் பல இடங்களிலும் வேகமாக பரவியதால் அவசர அவசரமாக மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இருப்பினும் மிக வேகமாக பரவ தொடங்கிய தீ மருத்துவமனை முழுவதும் சூழ்ந்து கொண்டது. எனவே பலர் வெளியேற முடியாமல் மருத்துவமனையிலேயே சிக்கியுள்ளனர். இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் அதற்குள்ளாக 3 நோயாளிகள் இந்த தீவிபத்தில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்னர்.
மேலும் 8 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்ற பிற நோயாளிகள் அங்கிருந்து வேறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோளாறான வெண்டிலேட்டர் காரணமாக தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.