இலங்கையில் பதற்றம்…! அமைச்சரின் பாதுகாவலர்கள் துப்பாக்கிச்சூடு…! 2பேர் படுகாயம்
இலங்கையில் அமைச்சரின் பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2பேர் காயம் அடைந்துள்ளனர்.
இலங்கையில் 2015 வருடம் அதிபராக மைத்திரி பால சிறிசேனா பதவியேற்றார். பிரதமராக ரணில் விக்கிரம சிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சிகளும் கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணி 3 வருட ஆட்சியை இலங்கையில் நடத்தி வந்தது.இந்த நிலையில் நேற்று திடீரென பிரதமராக இருந்த ரணில் விக்கரமசிங்கே அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபராக இருந்த மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றார்.
ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வந்தது.இலங்கையில் பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்ற நிலையில், அதற்கான அரசாணையையும் மற்றும் ஏற்கனவே பிரதமராக இருந்த ரணில் விக்ரம சிங்கே பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கான அரசாணையையும், அதிபர் மைத்ரிபால சிறிசேனா வெளியிட்டார்.
அதை தொடர்ந்து, இலங்கை நாடாளுமன்றம் வரும் நவம்பர் 16ம் தேதி வரை முடக்கப்படுவதாக, அதிபர் சிறிசேனவின் அறிவிப்பை, அமைச்சரவை செய்தி தொடர்பாளர் ரஜிதாசேன ரத்ன வெளியிட்டார்.
குறிப்பாக சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பினார்.அதில் இலங்கை பாராளுமன்றத்தை நவம்பர் 16ஆம் தேதி வரை முடக்கிவைப்பது நாட்டில் தீவிர விளைவுகளை ஏற்படுத்தும். நாடாளுமன்றத்தை முடக்கும் முன் சபாநாயகருடன் ஆலோசித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதேபோல் இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நீடிப்பதாக சபாநாயகர் அங்கீகாரம் அளித்தார்.
இந்நிலையில் அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தலைநகர் கொழும்பில் பெட்ரோலியத்துறை அமைச்சர் அர்ஜுனாரணதுங்கவின் பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் காயம் அடைந்துள்ளனர்.பின்னர் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அமைச்சர்களின் அலுவலகங்கள் நிறைந்த இடத்தில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.