உடல் முழுவதும் பச்சை, முகம் முழுவதும் அணிகலன் – வித்தியாசமான தோற்றத்திற்காக கின்னஸ் சாதனை படைத்த நபர்!
உடல் முழுவதும் பச்சை, முகம் முழுவதும் அணிகலன் என தனது வித்தியாசமான தோற்றத்திற்காக கின்னஸ் சாதனை படைத்த 61 வயது நபர்.
தற்போதைய நவீன காலகட்டத்தில் பச்சை குத்துவது போன்ற நிகழ்வுகளும் முகத்தில் அணிகலன்களை குத்திக் கொள்வது என்பதெல்லாம் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் பச்சை குத்துவதும் முகத்தில் அணிகலன்கள் அணிவதை கூட வாழ்நாள் பொழுதுபோக்காக ஒருவர் வைத்துள்ளார் என்றால் பாருங்கள். ஜெர்மனியில் வசித்து வரக்கூடிய 61 வயதான ரோல்ஃப் புச்சொல்ஸ் எனும் நபர் ஒருவர் தன்னை வித்தியாசமான தோற்றத்தில் காட்டிக் கொள்வதற்காக தனது உடல் முழுவதிலும் பச்சை குத்திக் கொண்டு காதுகள், உதடு, மூக்கு, நெற்றி, கண், இமைகள் என அனைத்திலும் அணிகலன்களை அணிந்து உள்ளார்.
மேலும் தனது கண்ணில் பச்சை குத்தியுள்ளார். இவர் தனது நெற்றியில் கொம்பு போன்ற ஒரு உள் அமைப்பு ஒன்றையும் ஆப்ரேஷன் மூலமாக வடிவமைத்துக் கொண்டுள்ளார். வித்தியாசமாக தன்னை காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக இவர் தனது உடலில் இதுவரை 453 துளையிட்டு அணிகலன்களை அணிந்துள்ளார். மேலும், அவரது உடலில் 90% பச்சை குத்தப்பட்ட நிலையில் தான் உள்ளது. மேலும் அந்த நெற்றியில் உள்ள உள்வைப்பு சப்டெர்மல் என கூறப்படுகிறது. இவர் கடந்த 2010ஆம் ஆண்டு அதிக எண்ணிக்கையிலான உடல் குத்தல்களை கொண்ட மனிதர் என கின்னஸ் சாதனை படைத்தவர்.
இருப்பினும் தொடர்ந்து அவர் தனது தனித்துவத்தை நிரூபிப்பதற்காக ஆங்காங்கு துளையிட்டு கொண்டே செல்கிறார். இவரது நாக்கு ஒரு முட்கரண்டி போல இருக்குமாம். அந்த அளவுக்கு இவரது நாக்கில் அணிகலன்களை குத்தியுள்ளார். இவர் மேலும் மணிக்கட்டை சுற்றி 6 சப்டெர்மல் எனும் உள்வைப்புகளை வைத்திருக்கிறாராம். அவரது கைகளில் காந்த உள்வைப்புகளை வைத்துள்ளாராம். இவரது வித்தியாசமான தோற்றத்துக்காக இவர் பல இடங்களில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 61 வயது கொண்ட இவர் தனது நாற்பது வயது முதல் இந்த பச்சை குத்த கூடிய செயலை பொழுதுபோக்காக செய்து வருவதாக கூறியுள்ளார்.