தமிழ் புத்தாண்டின் சிறப்பம்சங்கள்
நமது பாரம்பரிய விழாக்களில் சில மறக்கப்பட்டாலும், சில விழாக்கால இன்று நமது தமிழ் மக்களால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு தான் வருகிறது. அந்த விழாக்களில் ஒன்று தான் தமிழ் புத்தாண்டு.
தமிழ் புத்தாண்டு
எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்குப் பிந்திய ஆண்டுகளில், ஆவணியே முதல் மாதம் என்ற குறிப்பைக் காணமுடிகின்றது. ஆவணி முதல் மாதம் என்பது கணிப்பில் பயன்பட்டாலும், அதன் போது புத்தாண்டு என்று பண்டிகை கொண்டாடப்பட்டதா என்பது தொடர்பாக போதிய சான்றுகள் கிடைக்கவில்லை.
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் பஞ்சாங்கம்
நடைமுறைக்கு ஏற்றதாக தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது.
புத்தாண்டுக்கு முந்தைய நாட்களை வீடு வாசலை சுத்தம் செய்வதிலும், அலங்கரிப்பதிலும் தமிழர் செலவழிப்பர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது.
கைநீட்டம்
குளித்து முடித்து புத்தாடை உடுத்தி சாமி கும்பிட்ட பின்னர், பெரியவர்கள், தட்டில் வைத்த புது ரூபாய் நோட்டுக்களை எடுத்து வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், மற்றவர்களுக்கும் கொடுப்பார்கள் இதனை கைநீட்டம் என்கின்றனர். குறிப்பாக, இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சித்திரை ஒன்றையே புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள்.