தைவானில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் பலி எண்ணிக்கை உயர்வு !
நில நடுக்கத்தில் தைவானில் கட்டிடங்கள் அடியோடு சாய்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். 247 பேர் காயம் அடைந்தனர். 88 பேரைக் காணவில்லை. தைவானின் கிழக்கு கடற்கரை நகரான ஹூலியனில் நேற்றிரவு ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்ட ஹெல்மெட் கடையில் இருந்து ஒரு இளம் பெண் தனது செல்ல வளர்ப்புக் கிளியுடன் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலநடுக்கத்தில் பல அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டிடத்தின் கீழ்ப்பகுதி இடிந்து பூமியில் இறங்கிய நிலையில் அதற்கு அடியில் கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் நசுங்கிக் கிடக்கின்றன. இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேல் பகுதி இடியாமல் பைசா கோபுரம் போல சாய்ந்து நிற்கிறது.
பல்வேறு அடுக்குமாடிக் கட்டிடங்கள் தரைமட்டமாகிக் கிடக்கும் நிலையில் அவற்றுக்கு கீழும் ஏராளமானோர் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. கொட்டும் மழைக்கிடையில் கட்டிடங்களின் இடிபாடுகளில் இருந்து இருந்து மக்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
உயிர் பிழைத்தவர்கள் கையில் கிடைத்த பொருட்களுடன் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். பல்வேறு சாலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. உயிரிழந்த 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் 247 பேர் காயம் அடைந்துள்ளனர். 88 பேரைக் காணவில்லை என்று கூறப்படும் நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.