தங்கம் வென்ற தங்கங்களுக்கு..!! பரிசு தொகையை அறிவித்தது தமிழக அரசு…!!!
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய ஆண்கள் டேபிள் டென்னிஸ் அணி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றது. இதன் இறுதிஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கணக்கில் நைஜீரியாவை தோற்கடித்தது.
வாகை சூடிய இந்திய டேபிள் டென்னிஸ் குழுவில் இடம் பிடித்த வீரர்களில் சரத்கமல், அமல்ராஜ், சத்யன் ஆகியோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இவர்களை பாராட்டியுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்று வீரர்களுக்கும் தலா ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று நேற்று அறிவித்தார். அத்துடன் மூன்று வீரர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக வாழ்த்து கடிதமும் அனுப்பியுள்ளார்.
சரத்கமலுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில், ‘உங்களது விளையாட்டு வாழ்க்கையில் மீண்டும் ஒரு வெற்றி மகுடம் கிட்டியிருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். தொடர்ந்து 4 காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் கைப்பற்றி இருக்கிறீர்கள். இதில் 3 தங்கப்பதக்கமும் அடங்கும். வியப்புக்குரிய இத்தகைய சாதனை படைத்த உங்களுக்கு தமிழக அரசு மற்றும் மக்களின் சார்பில் இதயபூர்வமான வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
அமல்ராஜிக்கு அனுப்பிய கடிதத்தில், ‘காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் தேசத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து இருக்கிறீர்கள். அதுவும் தொடர்ந்து மூன்று காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்று இருப்பது என்பது உண்மையிலேயே மெச்சத்தகுந்த ஒன்று’ என்று கூறியிருக்கிறார். இதே போல் சத்யனுக்கும் தனது பாராட்டுகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.
வருங்காலத்தில் மேலும் பல வெற்றிகளை குவித்து இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும்படி வாழ்த்துவதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதில் குறிப்பிட்டு இருக்கிறார் என தமிழக அரசு வெளியிட்டுள்ள் செய்தி குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்