என்ன தான் நடக்கிறது சிரியாவில்?சொந்த மக்கள் மீதே தாக்குதல் நடத்தும் சிரியா அரசு…..
சிரிய அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் வசிக்கும் இடங்களை தேடித் தேடி தாக்குதல் நடத்தி வருகிறது சிரிய அரசுப்படை. இந்த கிளர்ச்சியாளர்கள், பொதுமக்கள் நடுவே வசித்து வருவதை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் அனைவர் மீதும் சிரிய ஆதரவு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் கடந்த வாரம் முதல் சிரியாவின் கிழக்கு கெளட்டா பகுதியில் தொடர்ந்து வரும் தாக்குதலினால், இதுவரை 541 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இந்த விவகாரம் பற்றி கடந்த சனிக்கிழமை அன்று ஐ.நா.,வில் விவாதிக்கப்பட்டு 30 நாட்களுக்கான போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனினும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்த நாளிலேயே மீண்டும் ஒரு கொலை வெறி தாக்குதலை கட்டு அவிழ்த்துவிட்டுள்ளது சிரிய அரசுப் படை. ஐ.எஸ்., தீவிரவாதிகள் மட்டுமே சிரியாவின் பொது மக்கள் மீது கொடூர தாக்குதல் அரங்கேற்றி வருகின்றனர் என்ற பிம்பமே உலகெங்கும் பரப்பப்படுகிறது.
சொந்த நாட்டினர் மீது அந்த அரசாங்கமே நடத்தியிருக்கும் இந்த தாக்குதல் போரில் எந்த தரப்பாகினும், அப்பாவி மக்களை பற்றி துளி கூட கவலையும் இன்றியே செயல்பட்டு வருகின்றன என்பதற்கு இரத்தத்தால் எழுதப்பட்ட உதாரணம் இது.
சிரியா மக்கள் தொகை :
வரலாற்றில் ஷாம் என்று அழைக்கப்பட்ட சிரியா, மத்திய கிழக்கில் அமைந்திருக்கும் எண்ணெய் வளமிக்க நாடாகும். சிரிய மக்கள் தொகையில் 74 சதவீத மக்கள் அரபு மொழி பேசும் சன்னி முஸ்லீம்கள், 16% பேர் ஷியா, குர்து போன்ற பிரிவு முஸ்லீம்கள், 10% சதவீத கிறிஸ்தவர்களும் வசிக்கின்றனர்.
சிரியாவினுடைய தற்போதைய அதிபர் பஷார் அல் ஆசாத் ஷியா பிரிவைச் சேர்ந்தவர். கடந்த 2000ம் ஆண்டிலிருந்து இவர் அதிபராக இருக்கிறார். இவருக்கு எதிராக கடந்த 2010 ஆண்டு வெடித்த மக்கள் புரட்சி உள்நாட்டுக் கலவரமாக நீடித்து வருகிறது.
அப்பாவிகளை தாக்குவதாகக் குற்றம்சாட்டி சிரியா மீது தாக்குதலை தொடங்கியது அமெரிக்கா. அமெரிக்கா களத்திற்கு வந்ததால் அனிச்சை செயல் போல் ஆசாதின் அரசுக்கு ஆதரவாக களமிறங்கியது ரஷ்யா. புரட்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆயுதம் தந்து உதவ, சிரிய அரசுக்கு ரஷ்யா ஆயுதம் தந்தது. இரு வல்லரசுகளுக்கு இடையிலான ஆயுத விற்பனை போட்டிக்கும், வல்லாதிக்கப் போட்டிக்கும் சிரியா இரையானது.
சன்னி முஸ்லீம்களுக்கான அமைப்பு என தன்னைச் சொல்லிக்கொள்ளும் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் இந்த உள்நாட்டு குழப்பத்தைப் பயன்படுத்தி சிரியாவுக்குள் நுழைந்தது. அந்த அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் பல நகரங்கள் வந்தன. அதனை மீட்க ரஷ்ய நடத்திய தாக்குதல் மனித உரிமைகள் தொடர்ந்து காற்றில் பறக்க விடப்பட்டன. சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தால் உலகம் சந்தித்த மற்றொரு முக்கியமான பிரச்சனை அகதிகளின் இடப்பெயர்வு.
சிரியாவிலிருந்து அகதிகளாக இடம்பெயர்ந்தவர்கள் பல்வேறு நாடுகளிலும் தஞ்சம் புகுந்தனர். அகதிகள் நகர்வின் போது ஏற்பட்ட உயிரிழப்புகளும் ஏராளம், கடந்த 2015ம் ஆண்டு துருக்கி நாட்டிலிருந்து கிரீஸ் நோக்கி கடல்வழியாகச் சென்ற சிரிய அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்ததில் பலர் உயிரிழந்தனர். துருக்கியின் கடற்பரப்பில் சடலமாகக் கிடந்த அய்லான் என்ற மூன்று வயது சிரியக் குழந்தையின் படம் சர்வதேச சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியது. அதன் பிறகே பல நாடுகள் அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க முன் வந்தன.
இந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கிழக்கு கௌட்டா நகரை மீட்பதற்காக சிரியா அரசு நடத்திய தாக்குதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகள்.
சிரியா அரசு ரசாயன தாக்குதல்:
கிளர்ச்சியாளர்கள் பகுதியான கிழக்கு கவுடாவில் சிரியா அரசு ரசாயன தாக்குதலை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான கவுடாவில் கடந்த ஒருவாரமாக சிரிய – ரஷ்ய கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.
இதில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள்.
இந்த நிலையில் சிரிய அரசு வான்வழி தாக்குதலில் குளோரின் வாயுவை பயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான செய்தியை சிரியாவின் ஓரியண்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சிரியா கண்காணிப்புக் குழு கூறும்போது, “கவுடாவில் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் குழந்தைகள். இதில் இறந்தவர்களின் மருத்துவ அறிக்கையின் மூலம் சிரிய அரசு ரசாயன தாக்குதலை நடத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பலருக்கு சுவாச குறைப்பாடு ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.
தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒருவர் கூறும்போது, ”மூன்று வயது குழந்தை ஒன்று முச்சு திணறலில் இறந்தது. அவர்கள் தாக்குதலுக்கு குளோரின் வாயுவை உபயோகித்துள்ளனர் என்று சந்தேகிக்கிறேன்” என்றார்.
சிரியா போர் விவரம் என்ன ?
தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் சிரிய உள் நாட்டுப் போரில் ஆம் சுமார் லட்சத்துக்கு அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 4 லட்சத்துக்கு அதிகமான மக்கள் அகதிகளாக தங்கள் மண்ணை விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
சிரியாவிலிருந்து துருக்கிக்குச் செல்ல முயன்ற, துருக்கியின் கடற்கரை மணலில் சரிந்து கிடந்த அய்லானை நினைவிருக்கிறது. அந்த அய்லானை போன்று இன்று பல இளம் பிஞ்சுகள் குண்டுகளாலும், வறுமையாலும் தொடர்ந்து மரணித்து வருகின்றனர்.
நடப்பவை எல்லாவற்றையும் பஷார் அல் ஆசாத் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆம் சிரிய மக்களது குடியிருப்புப் பகுதிகளில் ரஷ்யாவின் குண்டுகள் விழுவதை பஷார் மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஏன் இந்த மவுனம் பஷார்?…
உண்மையில் சிரியாவில் நடக்கும் இந்த உள்நாட்டுப் போருக்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? இஸ்லாமின் ஷியா பிரிவைச் சேர்ந்தவரான பஷார் ஆட்சி செய்வதை சிரியாவின் சன்னி பிரிவினர் ஏற்கவில்லை.
அங்கிருந்து பிரச்சினை தோன்றியது. சன்னி பிரிவினரே தற்போது கிளர்ச்சியாளர்களாகி யிருக்கிறார்கள். பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக ஆறு ஆண்டுகளாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு இடையில், ஐஎஸ் தீவிரவாத அமைப்பினரும் சிரியாவில் தங்கள் ஆதிக்கம் ஏற்பட அவ்வப்போது அப்பாவி மக்கள் மீது தாக்குதலை தொடர்ந்து கொண்டிருகிறார்கள்.
இந்த கலவரங்களுக்கு மத்தியில் அமெரிக்காவின் ஆயுதங்களை ஏந்தி போரிட்டு வரும் ஐஎஸ் தீவிரவாதிகளை, நாங்கள் அழிக்கிறோம் என்று அழையா தோழனாக அமெரிக்கா தனது பங்குக்கு சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. சிரிய கிளர்ச்சியாளர்களுக்கும் அமெரிக்கா உதவி வருகிறது. இவ்வாறு முற்றிலும் வன்முறை என்னும் சிலந்தி வலையில் சிரியா மாட்டிக் கொண்டுள்ளது.
மத்திய கிழக்கில் மற்றுமொரு நாடு அதிகாரத்துக்காகவும், மதத்துக்காகவும் எல்லா பக்கங்களிலிருந்தும் தாக்கப்படுகிறது.
பேச்சுவார்த்தைகள்:
ஐ.நா. சபையின் முயற்சியின்பேரில் ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் அதிபர் ஆசாத், எதிர்க்கட்சிகள் இடையிலான 2 நாள் அமைதிப் பேச்சுவார்த்தை கடந்த 25-ம் தேதி நடந்தது. ஆனால் இந்தப் பேச்சு வார்த்தையில் சுமுகமான முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை.
மாறாக ஐ. நாவின் அமைதிக் குழு, சிரிய அரசின் கூட்டாளியாக உள்ளது என்று கூறிவிட்டு சென்று விட்டனர் சிரிய கிளர்ச்சியாளர்கள்.
சிரிய மக்கள் மீது, அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் பகுதி மீதும் குண்டு பொழியும் ரஷ்யாதான் அவ்வப்போது அமைதி தூதுவனாக இந்தச் சண்டையில் களமிறங்குமே..
அந்தவகையில் ரஷ்யா இந்த வாரம் ஏற்பாடு செய்திருந்த அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்திருந்தது. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிடுகிறீர்களா? என சிரிய கிளர்ச்சியாளர்கள் இந்தப் பேச்சுவார்த்தையை புறக்கணித்துவிட்டனர்.
2018-ம் ஆண்டிலாவது சிரியாவில் அமைதி திரும்பி எங்கள் மழலைகள் குண்டு கலக்காத காற்றை சுவாசிப்பார்களா என காத்திருக்கும் சிரிய மக்களின் காத்திருப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது…. அமைதி திரும்புமா…சிரியாவில்?
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.