அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் கூட்டுப்படைகள் இணைந்து…!! சிரியா மீது சரமாரி தாக்குதல்…!!!
சிரியா மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் கூட்டுப்படைகள் இணைந்து 105 ஏவுகணைகளைக் கொண்டு சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதல் எதற்காக எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்துப் பார்க்கலாம்.
சிரியாவில் அதிபர் பசார் அல் ஆசாத் தலைமையிலான அரசு படைகள் பொதுமக்கள் மீது குளோரின், சரின் என்னும் நச்சு வேதிப்பொருட்களைக் கொண்ட ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய 3நாடுகளும் குற்றஞ்சாட்டின. சொந்த நாட்டு மக்கள் மீது சிரியா மீண்டும் அத்தகைய தாக்குதலை நடத்தாமல் இருக்க அதை அச்சுறுத்தும் வகையில் பெரிய தாக்குதலை நடத்த வேண்டும் எனத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், ராணுவ அதிகாரிகள் ஆகியோருடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
இதையடுத்தே சிரியாவின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்போவதாகவும், முடிந்தால் ரஷ்யா அதைத் தடுத்துப் பார்க்கட்டும் என்றும் டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்தார். அதற்கு முன் பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே, பிரெஞ்ச் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோரிடம் பல முறை தொலைபேசியில் இதுபற்றி டிரம்ப் பேசியிருந்தார்.
செங்கடல், மத்தியத் தரைக்கடல், அரேபிய வளைகுடா ஆகிய பகுதிகளில் நின்ற அமெரிக்கப் போர்க்கப்பல்களில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட ஏவுகணைகள் சிரியாவின் வேதி ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, ஆயுதக் கிடங்குகள், படை முகாம்கள் ஆகியவற்றைக் குறிவைத்துத் தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு இலக்கான பகுதிகளில் ரஷ்யப் படையினர் இல்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு முன்பே ஆயுதங்களையும் படையினரையும் சிரியா வேறிடங்களுக்கு மாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்