புகழுக்காக அவதூறு பேசுவதை இத்தோடு நிறுத்தி கொள்.! மீரா மிதுனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த பாரதிராஜா
நடிகர் விஜய் மற்றும் சூர்யா அவர்களை அவதூறாக பேசிய மீரா மிதுனை கண்டித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளுக்கு பிரபலமானவர் மீரா மிதுன். அண்மையில் நடிகர் விஜய் மற்றும் சூர்யாவை நெப்போடிஸத்தை சார்ந்தவர் என்று விமர்சனம் செய்ததை அடுத்து விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் அவரை தாறுமாறாக விளாசி வருகின்றனர். அது மட்டுமின்றி விஜய்யின் மனைவி மற்றும் சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகாவையும் வம்பிழுத்ததை அடுத்து கோவத்தின் உச்சிக்கு ரசிகர்கள் சென்று விட்டனர். இந்த நிலையில் மீரா மிதுனின் இந்த செயலுக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,சமீபமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவதூறு பேசுவதும் அதை சமூக ஊடகங்கள் வெளிக்கொணர்வதும் கண்ணாடி விட்டிற்குள்ளிருந்து கல்லெறிந்து கொள்வதைப் போலவும், மல்லாக்க படுத்துக் கொண்டு எச்சிலை உமிழ்வதைப் போலவும் தமிழ் சினிமா வெளியில் அரங்கேறுவது ஆபத்தான கலாச்சாரம் தொடங்கியுள்ளதோ என ஐயம் கொள்கிறேன்.
ஒருவரையொருவர் மதித்து வேலை செய்த காலகட்டத்தை… ஒருவரையொருவர் மரியாதை செய்து கலைப்பணியாற்றிய காலகட்டத்தை நாம் கடந்துவிட்டோமா என்ன? என்ற கவலையும் சேர்ந்துகொள்கிறது.
இதோ, நம் அன்புத் தம்பி விஜய், சூர்யா போன்றோர் எத்தகைய அடித்தளங்களை அமைத்து இந்த உயரத்திற்கு வந்துள்ளனர்.கவர்ச்சிகரமான இந்தத் துறையில் தன் பெயர் கெட்டுவிடாத அளவுக்கு எப்படி தங்கள் வாழ்க்கை முறையை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்?
திருமணம் செய்து கண்ணியமான குடும்ப வாழ்க்கையை, அழகுற கட்டமைத்துள்ளனர் என்பதை இத்தனை ஆண்டுகால அவர்களின் வாழ்க்கை நம் முன் கண்ணாடி போல் நிற்கிறதே.அழகிய ஓவியத்தின் மீது சேறடிப்பது போல மீராமிதுன் என்கிற பெண் தன் வார்த்தைகளை கடிவாளம் போடாமல் வரம்புமீறி சிதறியுள்ளார். திரையுலகில் பயணிக்கும் ஒரு மூத்த உறுப்பினனாக நான் இதைக் கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன்.
மீரா, வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது. உழைத்துப் போராடி, எண்ணங்களை சீர்செய்து நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்களம்மா. வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது. அடுத்தவரைத் தூற்றிப், பழித்து அதில் கோட்டை கட்டாதீர்களம்மா. அது மண்கோட்டையாகத்தான் இருக்கும். வார்த்தைகள் பிறருக்கு வலியைத் தருவதாக அமையாமல், இன்னொருவருக்கு வாழ்க்கையை வளம் ஏற்படுத்தும்… பசியைப் போக்கும்.அவசியமானவைகளாக அவை உதடுதாண்டி வெளிவரட்டும்.ஒரு அறிக்கைவிட்டாவது அவர்களை மட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அந்த ரசிகன் எங்கிருந்தோ கழிவின் மீது கல்லடிக்கிறான். பாருங்கள், அது நம் விட்டு அடுப்படியில் நாறுகிறது. உங்கள் பெயரும் புகழும் நீடித்து நிலைத்திருக்க இன்றே நல்ல கண்மணிகளை வளர்த்தெடுங்கள் உச்ச நட்சத்திரங்களே.என் போன்றோருக்கு உங்கள் மீது தூசு விழுந்தாலும் உத்திரம் விழுந்தது போல் வலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
Statement for regarding the Recent issues of Actor #Vijay & #Suriya pic.twitter.com/DgWHPOKhSi
— Bharathiraja (@offBharathiraja) August 10, 2020