படி…..! படி…. என்றால் படிப்படியாய் குறையும்….!!!
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பது என்பது ஒரு இமாலய சாதனையை நிகழ்த்துவதற்கு சமம். பணத்தை எவ்வளவுதான் கொட்டினாலும் பிள்ளைகளுக்கு படிப்பை என்பது ஒரு வரம் தான். சில பிள்ளைகள் உண்மையிலேயே படிக்கும் திறமை கொண்டிருந்தாலும், தங்கள் திறமையைத் தாங்கள் தெரிந்து கொள்ளாமல் ஒருவித தாழ்வு மனப்பான்மையால் தாம் படிக்க இயக்கத்தவர்கள் என்று பயந்து விடுகின்றனர்.
குழந்தைகளுக்கு டியூஷன் பயிற்சி வகுப்புகள் வேண்டாம் :
அதேபோல் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தது முதலே நன்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் டியூஷன் பயிற்சி வகுப்புகள் என்று ஏற்பாடு செய்து விடுகின்றனர். ஆனால் இதுவே அந்தப் பிள்ளைகளுக்கு படிப்பு மீது ஒருவித வெறுப்பை ஏற்படுத்தி விடுகிறது. காலையில் கண் விழித்தது முதல் இரவு கண் மூடி தூங்கும்வரை படிப்பு.. படிப்பு… என்றால் பெரியவர்களே வெறுத்து விடுவார்கள்.
குழந்தைகளுக்கு தானே படிக்கும் ஆர்வத்தை பிள்ளைகளுக்கு உண்டாக்க வேண்டும் :
பிள்ளைகள் தானே படித்து கொள்ளும் ஆர்வத்தை மட்டுமே பெற்றோர்கள் உண்டாக்க வேண்டும். பிள்ளைகள் விளையாடும் போதோ, அல்லது ஜாலியாக பேசிக்கொண்டிருக்கும் போதோ படி, படி என்று வற்புறுத்துவது கூடாது. பிள்ளைகள் விரும்பாமல் நீங்களே அவர்களுக்கு டியூஷன் ஏற்பாடு செய்வது, பிள்ளைகளுக்கு படிப்பின் மீதுள்ள ஆர்வத்தை சிதைத்துவிடும். படிப்பின் மீது ஒரு வெறுப்பையும், கவனக் குறைவையும் ஏற்படுத்திவிடும்.
குழந்தைகளை விளையாடும் நேரங்களில் விளையாட விட வேண்டும் :
பள்ளியில் படிப்பு, வீட்டுக்கு வந்ததும் டியூஷன், பின்னர் வீட்டில் எழுதவும், படிக்கவும் என்றிருந்தால் படிப்பு என்றால் வேப்பங்காயாக கசக்கும். சிரித்து விளையாடவும் நேரமில்லாமல் பிள்ளைகள் மெலிந்தும், நெளிந்தும் சோர்வடைந்து விடுவார்கள். மேலும் நிம்மதியான தூக்கமின்றி, மனதில் பயத்துடன் இருப்பார்கள்.
பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு டியூஷன் வேண்டவே வேண்டாம். குழந்தைகள் விளையாடும் நேரங்களில் விருப்பப்படி அவர்களை விளையாட விடுங்கள். படிக்கும் நேரம் வந்ததும் அவர்கள் படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும்.
குழந்தைகளை பக்குவமாக திருத்த வேண்டும் :
வீட்டுப்பாடங்களை பிள்ளைகள் சரிவர எழுதாமல் விட்டிருக்கக் கூடும். ஒரு வேளை ஆசிரியர் அதிகமான பாடங்களைக் கொடுத்திருக்க கூடும். பிள்ளைக்கு பாடங்களை எழுத, வகுப்பில் பாடங்களை கவனிக்காமல் இருந்திருக்கலாம். இல்லாவிட்டால் பாடம் புரியாமல் பிள்ளைக்கு கடினமாக இருந்திருக்கலாம். இப்படி பல காரணங்கள் இருக்கும். அதை கண்டுபிடித்து அவர்களை பக்குவமாக திருத்துங்கள்.
குழந்தைகள் எல்லா திறனும் படைத்தவர்கள் தான் :
பிள்ளைகளின் போக்கில், குணத்தில் மாற்றம் தெரிந்தால் வகுப்பில் ஏதாவது தொந்தரவு இருக்கலாம். ஆதலால் ஆசிரியரை சந்தித்து காரணத்தை தெரிந்து, பிள்ளைகளின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். சரியாக படிக்கவில்லை என்பதற்காக உங்களுடைய பிள்ளைகள் மந்தமானவர்களோ அல்லது முட்டாளோ அல்ல என்பதை நீங்கள் உரிந்து கொள்ளுங்கள். எல்லாருமே இல்லாத திறனும் படைத்தவர்கள் தான்.
படிப்பில் உங்கள் பிள்ளைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வத்தை ஊட்டி விட்டால் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவதில் தடை இருக்காது.