திமுக தலைவராக உயர்ந்த மு.க.ஸ்டாலினுக்கு இன்று 67-வது பிறந்த நாள்
மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவர் ஆவார்.இவர் 1953 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1-ஆம் தேதி பிறந்தார்.தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் ,உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் 2009 -ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்துள்ளார்.இவர் தமிழக அரசியல்வாதி மு. கருணாநிதியின் மகன் ஆவார். சட்டமன்ற அவை உறுப்பினராகவும், சென்னை மாநகராட்சித் தலைவராகவும் இதற்கு முன்னர் ஸ்டாலின் பொறுப்பு வகித்துள்ளார்.
தந்தையின் அரசியல் பணிகள் காரணமாகவும், ஸ்டாலினுக்கும் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தாலும் திமுக உறுப்பினரானார். அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1967-1968 இடைப்பட்ட ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராகப் படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவ்வமைப்பின் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்குப் பொதுப்பணிகளையும் சமூகப்பணிகளையம் செய்து வந்தார் ஸ்டாலின்.தற்போது திமுகவின் தலைவராக உயர்ந்துள்ள ஸ்டாலினுக்கு இன்று 67 வது பிறந்த நாள் ஆகும்.