#Flash:இலங்கையின் புதிய அதிபராக இவர் பெயர் பரிந்துரையா? – வெளியான முக்கிய தகவல்!
இலங்கைப் பொது மக்களின் கடும் எதிர்ப்புக்குப் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருவரும் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.இதன்காரணமாக,ஜூலை 15 இலங்கை பாராளுமன்றத்தை கூட்டி,அரசியலமைப்பின் படி ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் இருப்பதை சபைக்கு தெரிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்,ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19-ஆம் தேதி கோரப்பட்டு,இலங்கை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் புதிய ஜனாதிபதியை ஜூலை 20 ஆம் தேதி தேர்வு செய்ய இலங்கை கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயவானது (SJB),இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு சஜித் பிரேமதாசவை முன்னிறுத்துவதாக பரிந்துரைத்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால்,அதிபர் பதவிக்கு 113 எம்பிக்கள் ஆதரவு தேவை உள்ள நிலையில் சஜித்பிரேமதாசவின் கட்சியில் 50 எம்பிக்கள் உள்ளனர்.
இதனிடையே,தாய்நாட்டைப் பாதுகாத்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தயார் என ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.மேலும்,இலங்கையின் தற்போதைய சூழலை சரிசெய்ய புதிய ஜனாதிபதி மற்றும் புதிய பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை நியமிப்பதைத் தவிர வேறு எந்த மாற்று தீர்வும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.