இலங்கையின் புதிய அமைச்சர்கள் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு!
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது நான்கு புதிய அமைச்சர்களை அறிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவியில் இருக்கும் ராஜபக்ச குடும்பம் தான் காரணம் என எதிர்க்கட்சிகள்,பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மக்கள் கோபம்:
பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மக்களை விழி பிதுங்க வைத்துள்ளன மற்றும் வாழ வழியில்லாத சூழல் மக்களிடையே வேதனையையும், கோபத்தையும் உண்டாக்கியுள்ளது.இந்த கோபம் உச்சகட்டத்தை அடைந்த நிலையில்,மாபெரும் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்தனர்.
600 பேர் கைது:
இதனால்,அச்சம் கொண்ட இலங்கை அரசு 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை நேற்று முன்தினம் பிறப்பித்தது.அதன்படி,இன்று காலை 6 மணிக்கு பிறகு ஊரடங்கு நீக்கப்பட்டு விட்டது.இதனிடையே,ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தை மக்கள் சுற்றி வளைத்ததை அடுத்து,நாடு அவசரகாலச் சட்டத்தின் கீழ் உள்ளது.எனினும்,ஞாயிற்றுக்கிழமை,இலங்கையின் மேற்கு மாகாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறியதற்காகவும்,எதிர்ப்பை அரங்கேற்ற முயன்றதற்காகவும் 600 பேர் கைது செய்யப்பட்டனர்.
அமைச்சர்கள் ராஜினாமா:
இவ்வாறான பரபரப்பான சூழலில் ஞாயிற்றுக்கிழமை இரவு கேபினட் அமைச்சர்கள் பெருமளவில் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து,இன்று 26 அமைச்சர்களின் ராஜினாமாவை அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொணடார்.
எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு:
இந்த சூழலில்,அதிபர் ராஜபக்சே பதவி விலகக் கோரி ஆங்காங்கே இன்று காலை முதல் போராட்டங்கள் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக,நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு உதவுமாறும் அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறும் எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்தார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்தது.
Sri Lankan President Gotabaya Rajapaksa invites all political parties in the country to join the Ministry to find a solution to the national crisis. He has called on all political parties to work together to find a solution to the national crisis that has arisen.
(File photo) pic.twitter.com/oGTtf80MxR
— ANI (@ANI) April 4, 2022
புதிய அமைச்சர்கள்:
இந்நிலையில்,இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச தற்போது நான்கு புதிய அமைச்சர்களை அறிவித்துள்ளார்.அதன்படி,ஞாயிற்றுக்கிழமை இரவு வரை நிதியமைச்சராக இருந்த பசில் ராஜபக்சவுக்குப் பதிலாக அலி சப்ரியை புதிய நிதி அமைச்சராக ஜனாதிபதி நியமித்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்,வெளியுறவுத்துறை அமைச்சராக ஜி.எல்.பீரிஸும்,புதிய கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தனவும்,புதிய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவவையும் நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.