தென் ஆப்ரிக்கா அணிக்கு புதிய கேப்டன் தேர்வு !
தென் ஆப்ரிக்கா கேப்டன் டுப்லேசிஸ் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகிய நிலையில் தற்போது தென் ஆப்ரிக்கா கேப்டன் யார் என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் நிலவியது.இந்த சூழலில் தற்போது புதிய கேப்டனைத் தேர்வு செய்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 போட்டித்தொடர்களில் விளையாடி வருகிறது.
டர்பனில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியின் போது, தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூபிளசிஸ்க்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. அந்த காயம் குணமடைய 6 வாரங்கள் வரை ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
முன்னதாக, காயம் காரணமாக, அனுபவ வீரர் டீவில்லியர்ஸும் 3 போட்டிகளுக்கு விளையாடாமல் விலகுவதாக அறிவித்து இருந்தார். இதனால், இக்கட்டான நிலைக்கு தென் ஆப்பிரிக்கா தள்ளப்பட்டது. அடுத்ததாக யாருக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. டுமினி, அம்லா, குயின்டன் டீ காக் ஆகியோரின் பெயரும் அடிபட்டது.
இந்நிலையில், யாரும் எதிர்பாரா நிலையில், சர்வதேச அளவில் 2 போட்டிகள் மட்டுமே பங்கேற்ற அனுபவம் கொண்ட இளம் வீரர் எய்டன் மார்கிராம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எஞ்சியுள்ள ஒருநாள் போட்டிகளுக்கும், டி20 போட்டிகளுக்கும் கேப்டனாகத் தொடர்வார் எனத் தென் ஆப்பிரிக்க வாரியம் அறிவித்துள்ளது.
ஏன் மார்க்ரம் தேர்வு செய்யப்பட்டார்?
கடந்த 2014ம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைப் போட்டியில் மார்க்ரம் தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி சிறப்பாகச் செயல்பட்டது. அது மட்டுமல்லாமல் சமீபத்தில் முதல் தரப்போட்டிகளுக்கு கேப்டானாகப் பணியாற்றியது, கிளப் அணியை வழிநடத்தியதில் மார்க்ரம் பணி சிறப்பாக இருந்துள்ளது. இவரின் பேட்டிங் சராசரியும் அபாரமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபரில் உள்நாட்டில் நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று, 119, 87, 67, 81 நாட் அவுட் என மார்க்ரம் ரன் வேட்டை நடத்தியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பைப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வழிநடத்திச் செல்ல இளம் வீரரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், இப்போதே மார்க்ரமை பட்டைதீட்ட அந்தநாட்டு வாரியம் முடிவு செய்துவி்ட்டது.
தென் ஆப்பிரிக்க அணிக்கு இளம் வயதில் கேப்டன் பொறுப்பை வீரர்கள் ஏற்பது புதிது இல்லை. இதற்கு முன் ஹேன்சி குரோனியே, கிரேம் ஸ்மித் ஆகியோர் 23 வயதுகளில் கேப்டன் பொறுப்பை ஏற்று சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். ஆதலால், மார்க்கிரமுக்கு மூத்த வீரர்களான டீவில்லியர்ஸ், டீகாக், மோர்கல், டுமினி, அம்லா ஆகியோரின் ஒத்துழைப்பு சிறப்பாக கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியின்போது, தொடக்க வீரராக களம் இறங்கிய மார்க்கிராம் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், கேப்டன் பொறுப்பை ஏற்றபின் நடுவரிசையிலோ அல்லது 3-வது வீரராகவே களமிறங்க வாய்ப்பு உண்டு.
மிகப்பெரிய கவுரவம்
தான் கேப்டனாக பொறுப்பு ஏற்பது குறித்து எய்டன் மார்க்ரம் நிருபர்களிடம் கூறுகையில், “ எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். உண்மையில் நாம் சிறுவயதில்வளர்ந்து வரும்போது, நாட்டு அணிக்காக கேப்டன் பொறுப்பே ஏற்க வேண்டும் என விரும்புவது இயல்பு. இப்போது ஆகிவிட்டேன். ஆனால், டூபிளசிஸ் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்.ஆனால், தேர்வாளர்கள் என் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பை கொடுத்து இருக்கிறார்கள். டூபிளசிஸ்க்க அடுத்துவரும் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.