3,700 பயணிகளுடன் கடலில் தத்தளிக்கும் கப்பல்.! 41 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி.!
- ஹாங்காங் சென்று திரும்பிய ஜப்பான் சொகுசுக் கப்பலில் மேலும் 41 பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- 3,700 பயணிகளுடன் இருக்கும் கப்பலை நாட்டிற்கு உள்ளே அனுமதிக்காமல் துறைமுகத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலேயே ஒகினாவா மாகாணம் அருகே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 20-ம் தேதி 3,700 பயணிகளுடன் ஜப்பானின் யோகோஹாமா நகரில் இருந்து டைமண்ட் பிரின்சஸ் கப்பல் ஹாங்காங் புறப்பட்டது. பின்னர் ஹாங்காங்கில் இருந்து அந்த கப்பல் ஜப்பானுக்கு திரும்பும்போது, கப்பலில் இருந்த 80 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஜப்பானுக்கு வந்த கப்பலுக்கு கடந்த 1-ம் தேதி அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பிறகு பயணிகளுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டதில், 20 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில், மேலும் 273 பேருக்கு சோதனை நடத்தப்பட்டதில், அதில் 41 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 3,700 பயணிகளுடன் இருக்கும் இந்த கப்பலை நாட்டிற்கு உள்ளே அனுமதிக்காமல் துறைமுகத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலேயே ஒகினாவா மாகாணம் அருகே கப்பல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த கப்பலில் சிலருக்கு இருமல் இருப்பதாக அங்குள்ள பயணிகள் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் அவர்களுக்கான தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு, கப்பலுக்குள் நடமாடவும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் பயணிகளுக்கிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சீனாவில் இந்த வைரசால் உயிரிழப்பின் எண்ணிக்கை 636-ஆக உயர்ந்து, 31161 பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று மட்டும் புதிதாக 3143 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் 69 பேர் உயிரிழந்துள்ளார்கள் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பின்னர் இந்த வைரசால் 4,800 பேர் மோசமான நிலையில் உள்ளார்கள் என தகவல் கூறப்படுகிறது என குறிப்பிடப்படுகிறது.