தூங்கும்போது கூட சார்ஜ் செய்யும் கருவி – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!
தூங்கும்போது கூட சார்ஜ் செய்யும் ஒரு புதிய கருவியை கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவான சான் டியாகோ ,மனித உடலில் உருவாகும் ஆற்றலைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போன்கள் மற்றும் கைக்கடிகாரங்களை சார்ஜ் செய்ய உதவும் ஒரு சிறிய வடிவிலான கருவி ஒன்றை உருவாக்கியுள்ளது.
இது தொடர்பாக,இந்த ஆய்வில் பங்கேற்ற ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்,”இந்த கருவியை அணிவதால், பத்து மணி நேரம் தூக்கத்தில் கூட 24 மணி நேரம் ஒரு கடிகாரத்தை இயக்கக்கூடிய மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும் “,என்று தெரிவித்துள்ளனர்.
தூக்கத்தின் போது கூட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்யலாம் :
இப்போது சந்தையில் கிடைக்கக்கூடிய பெரும்பாலான அணியக்கூடிய சார்ஜிங் கருவிகள் மூலம் சார்ஜ் செய்ய, பயனர்கள் தீவிர உடற்பயிற்சி செய்ய வேண்டும் அல்லது சூரிய ஒளி போன்றவற்றை சார்ந்து இருக்க வேண்டும் அல்லது சாதனங்களை சார்ஜ் செய்ய வெப்பநிலையில் பெரிய மாற்றங்கள் தேவை.
ஆனால்,ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய இந்த புதிய கருவிமூலமாக பயனர் தூங்கும்போது கூட ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்னணு கைக்கடிகாரங்களை சார்ஜ் செய்ய முடியும்.
இத்தகைய புதிய கண்டுபிடிப்பு புரட்சிகரமாகக் கருதப்படுகிறது,மேலும் ஆராய்ச்சியாளர்கள் இதை ஆற்றல் அறுவடையின் ‘ஹோலி கிரெயில்'(தூய்மையான சக்தி) என்று அழைக்கின்றனர்.
விரல்மூலம் சார்ஜிங் :
பயனர்கள் இந்த கருவியை அழுத்தும் போது அல்லது விரலில் வியர்க்கத் தொடங்கும் போது,கருவியானது ஒரு ஒட்டும் பிளாஸ்டர் போல விரலைச் சுற்றிக் கொள்கிறது.இதனால், இதற்கு ஒரு உடற்பயிற்சி தேவையில்லை.
இந்த சார்ஜிங் கருவிக்கு சக்தியை உருவாக்க விரல் நுனியைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில் ,”இந்த கருவியில் மனித வியர்வையை உறிஞ்சக்கூடிய கார்பன் நுரையிலிருந்து தயாரிக்கப்பட்ட மின் கடத்திகள் பொருத்தப்பட்டுள்ளது.இதன்மூலம்,இந்த கருவி மின்சாரத்தை உருவாக்கும்.
அதாவது,உடலின் மற்ற பாகங்களில் நாம் வியர்வையாக இருப்பதை உணர காரணம், அந்த பகுதிகளில் நல்ல காற்றோட்டம் இல்லாததால்தான். இதற்கு நேர்மாறாக, விரல் நுனிகள் எப்போதும் காற்றில் வெளிப்படும், எனவே வியர்வை வெளியே வரும்போது ஆவியாகிவிடும்.ஆனால், அதை ஆவியாக விடாமல்,இந்த வியர்வையை சேகரிக்க எங்கள் சாதனத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம்.இதன்காரணமாக கணிசமான அளவு ஆற்றலை உருவாக்க முடியும்.இதன்மூலம்,மின்னணு சாதனைங்களை சார்ஜ் செய்ய முடியும்”,என்று கூறினார்.