கொரோனா வைரஸ் ஆராய்ச்சிய்ன் முடிவில் இருந்த ஆராய்ச்சியாளர் சுட்டுக்கொலை…
உலகம் முழுவதையும் தனது கோர பிடியில் சிக்க வைத்து வரும் கொடிய கொரோனா வைரஸ் பிடியிலிருந்து தப்ப உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர் தற்போது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சுட்டு கொல்லப்பட்ட ஆராய்ச்சியாளர் பெயர் டாக்டர் பிங் லியு என்பதாகும். இவர், கடந்த சனிக்கிழமை அவரது வீட்டில் துப்பாக்கியால் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ஆய்வில் ஆராய்ச்சியாளர் இறந்த ஒரு மணி நேரத்துக்கு பின்பு அவர் இல்லத்திலிருந்து சிறிது தூரத்தில் ஒரு காரில் ஒரு நபர் தலையில் சுடப்பட்டு இறந்து கிடந்ததைக் கண்டுபிடித்தனர். பின் நடைபெற்ற முதல் கட்ட விசாரணையில், இரண்டாவதாக கண்டுபிடிக்கப்பட்ட நபர் தான் ஆராய்ச்சியாளர் பிங் லியுவின் நெருங்கிய நண்பர் ஹாவோக்யு என்பதும் அவர்தான் பிங் லியுவை கொலை செய்துவிட்டு பின்பு காரில் சென்று தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த கொலைக்கான காரணம் உறுதியாக தெரியவில்லை.
அந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் பிங் லியு பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவி பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர், அவர், கணக்கீட்டு அறிவியல் துறையில் முனைவர் பட்டமும், கம்ப்யூட்டேஷன் மாடலிங் மற்றும் அனலைசிஸ் ஆப் பயோலாஜிக்கல் சிஸ்டம்ஸ் டைனமிக்ஸ் துறை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். தற்போது கொரோனா வைரஸ் செல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வந்த டாக்டர் பிங் லியு, அதன் முடிவின் விளிம்பில் இருந்ததாக அத்துறையின் தலைவர் இவேட் பஹார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.