சவுதி அரேபியாவில் முதன்முறையாக பெண்களுக்கான கார் விற்பனையகம்!
முதன்முறையாக சவுதியில் பெண்களுக்கான கார் விற்பனையகம் தொடக்கப்பட்டது.
சவுதி அரேபியாவில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாகனம் ஓட்டுவதற்கு பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இஸ்லாமிய மதக் கோட்பாட்டின் அடிப்படையில், இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இதனிடையே, சவுதியின் புதிய மன்னராக பொறுப்பேற்ற முகமது சல்மான், பெண்கள், வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்த செப்டம்பர் மாதம் நீக்கினார். மன்னரின் இந்த நடவடிக்கைக்கு பெரும்பாலான உலக நாடுகள் பாராட்டு தெரிவித்தன.
இந்நிலையில், சவூதி அரேபியாவின் எடா நகரில் உள்ள வணிக வளாகத்தில் ஒரு தனியார் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான கார் விற்பனையகம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. சவுதியில் பெண்களுக்காக மட்டும் ஒரு கார் விற்பனையகம் தொடங்கப்படுவது இதுவே முதன்முறையாகும். இந்த விற்பனையகத்தில் பெண்கள் மட்டுமே கார் வாங்க முடியும். மேலும், அங்கு பணிபுரிபவர்கள் அனைவரும் பெண்களே. இந்த விற்பனையகத்தில் கார் வாங்கும் பெண்களுக்கு, தேவைப்படும்பட்சத்தில் கடனுதவிகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்களுக்கென கார் விற்பனையகம் தொடங்கப்பட்டிருப்பது சவுதி பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.