இனி சவுதி அரேபியாவுக்கும் சுற்றுலா செல்லலாம்! முதலில் 49 நாடுகளுக்கு சுற்றுலா விசா!
கச்சா எண்ணெய் உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்து வரும் சவுதி அரேபியா நாடு, பல கட்டுப்பாடுகளை விதித்துக் இருந்ததால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவதற்கு அனுமதி இல்லாமல் இருந்து வந்தது. தற்போது அந்த முறை மாற்றப்பட்டுள்ளது. காரணம் சுற்றுலா துறை மூலமும் வருமானம் ஈட்டவும் அந்நாடு முடிவெடுத்துள்ளது.
நாளை முதல் 49 நாடுகளுக்கு சுற்றுலா விசா வழங்க உள்ளது. மேலும், இதுபற்றி கூறுகையில் சவுதியில் 5 உலக பாரம்பரிய இடங்கள் உள்ளதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. மேலும் இங்கு சுற்றி பார்க்க அதிக இடம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள் என அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் அந்நாட்டு பெண்கள் எப்போதும் போல் உடல் முழுவதும் மூடியபடி பாரம்பரிய உடை அணிந்து வருவர். ஆனால், சுற்றுலா வரும் பெண்களுக்கு அந்த உடை கட்டுப்பாடு கிடையாது. ஆனால் ஆடைஅணியும் முறையில் நாகரிகம் தேவை எனவும் குறிப்பிடபட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளை கவருவதற்காக புதிய திரையரங்குகள், ஆண் பெண் என இருபாலரும் சேர்ந்து கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சிகள் என பல திட்டங்களை இளவரசர் முகமது பின் சல்மான் நடைமுறைப்படுத்த உள்ளார்.
சென்ற ஆண்டு விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை காண சுற்றுலா விசா வழங்கப்பட்டது. ஆனால், அங்கு ஆல்கஹால் தடை விதிக்கப்பட்டிருந்ததால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் சவுதிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.