#Breaking:உக்ரைனில் 4 இடங்களை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் – ரஷ்யா அறிவிப்பு!
உக்ரைனில் நான்கு இடங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ரஷ்யா அறிவிப்பு.
உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னதாக தலைநகர் கீவ்-வை கைப்பற்ற ரஷ்யா ராணுவ படைகள் தாக்குதல் ஈடுபட்டு வந்த நிலையில் உக்ரைனின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்தது. மேலும், உக்ரைனின் அதிக மக்கள் தொகை கொண்ட 2-வது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் தாக்குதல் நடத்தி அந்நகரத்தையும் கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில்,உக்ரைனில் கெர்சான்,பெர்டியான்ஸ்க், கெனிசெஸ்க், செர்னோபேவ்கா ஆகிய நான்கு பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக ரஷ்ய படைகள் அறிவித்துள்ளது.மேலும்,உக்ரைன் படைகளின் ஏராளமான ஆயுதங்களையும் தாங்கள் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இதனிடையே,உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தங்களது பிரதிநிதிகள் பெலாரஸ் நாட்டில் தயாராக இருப்பதாக ரஷ்யா அதிபர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயார் என உக்ரைன் அரசு முன்னதாக கூறியிருந்த நிலையில் ,உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தங்களது பிரதிநிதிகள் பெலாரஸ் நாட்டில் தயாராக இருப்பதாக சற்று நேரத்திற்கு முன்னர் ரஷ்ய அதிபர் மாளிகையான க்ரெம்ளின் அறிவித்திருந்தது.
ஆனால்,ரஷ்யாவுடன் பெலாரசில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.