“சரணடையுங்கள்” என்று எச்சரித்த ரஷ்யா – மறுத்து விட்ட உக்ரைன்!
கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய படைகள் பலமுனை தாக்குதல் நடத்தி வருகின்றன.அந்த வகையில்,மரியுபோல் நகரை சுற்றி வளைத்து தொடர் தாக்குதலை ரஷ்ய படைகள் நடத்தி வருகின்றது.
உணவுப் பற்றாக்குறை:
இதனால்,சுமார் 3,00,000 பேர் அங்கு சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும்,உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இந்த சூழலில்,மரியபோல் நகரில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவிகள் வெளியிலிருந்து வருவதை ரஷ்ய படைகள் தடுக்கின்றன.
சரணடையுங்கள்:
இந்நிலையில்,முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகரத்தில் உள்ள மக்கள் சரணடைந்தால் துறைமுகத்தை விட்டு பாதுகாப்பான பாதையில் செல்லலாம் என்றும்,ரஷ்யாவின் முன்மொழிவின் கீழ், நகரத்தின் பாதுகாவலர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டால் பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ரஷ்ய இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சலுகை:
அவ்வாறு சரணடைந்தால்,இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு,சாலைகளில் கண்ணிவெடி அகற்றும் பணி முடிந்ததும், உணவு, மருந்து மற்றும் பிற பொருட்களைக் கொண்ட வாகனங்கள் பாதுகாப்பாக நகருக்குள் நுழைய அனுமதிப்போம் என்று ரஷ்யப் படைகள் கூறியுள்ளன.
உக்ரைன் நிறுத்தாது:
இந்நிலையில்,ரஷ்யா அறிவித்துள்ள இந்த சலுகைக்கு பதிலளிக்கும் விதமாக, உக்ரைனின் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக், மரியுபோலைப் பாதுகாப்பதை உக்ரைன் நிறுத்தாது என்று கூறியுள்ளார்.
மூன்றாம் உலகப் போர்:
இதனிடையே,உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி புதினுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும்,ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியுற்றால், மூன்றாம் உலகப் போர் ஏற்படலாம் என்றும் கூறியுள்ளார். உடனடியாக பேச்சுவார்த்தை நடத்துமாறு ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார். அவ்வாறு செய்யத் தவறினால் ரஷ்யாவிற்கு “பெரும் இழப்புகள்” ஏற்படும் என்று எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.