ரஷ்யா – உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மார்ச் 10-ல் துருக்கியில் பேச்சுவார்த்தை.!
ரஷ்யா – உக்ரைன் இடையே ஏற்கனவே நடைபெற்ற இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்படும் ஏற்படாததால், இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனால் ரஷ்யா-உக்ரைன் பிரதிநிதிகள் சந்திப்பு இன்னும் 2 மணி நேரத்திற்குள் தொடங்கும் என்றும் ரஷ்ய தூதுக்குழு தற்போது பெலாரஸில் காத்திருப்பதாக ரஷ்ய ஊடகம் தகவல் கூறியுள்ளது.
இந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மார்ச் 10-ல் துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ரஷ்ய அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உக்ரைன் அமைச்சர் திமிட்ரோ குலேபா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர் என்று தகவல் கூறப்படுகிறது.
இதனிடையே, உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வந்த ரஷ்யா, தற்போது உக்ரைனில் உள்ள 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தது. போர் நடக்கும் இடங்களில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க, மனிதாபிமான அடிப்படையில் இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது என ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.