கொரோனா வைரஸ் தடுப்பூசி திருட ரஷ்யா முயற்சி .! அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா குற்றசாட்டு .!
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் 13,986,208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் 593,520 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்க உலக நாடுகள் போட்டி போட்டு வருகிறது.
கொரோனா வைரசுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வரும் வருகிறது. இந்நிலையில், APT29, “டியூக்ஸ்” அல்லது “கோஸி பியர்” என அழைக்கப்படும் ஒரு பிரிவைச் சேர்ந்த ரஷ்யா ஹேக்கர்கள், மூன்று நாடுகளில் உள்ள தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகளை குறிவைத்து வருவதாக அதிகாரிகள் கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஜனநாயகக் கட்சியின் கணினிகளில் ஊடுருவிய இரண்டு ரஷ்ய உளவு குழுக்களில் இந்த பிரிவு ஒன்றாகும். லண்டனை தளமாகக் கொண்ட ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட்டின் சர்வதேச இயக்குனர் ஜொனாதன் ஈயல் கூறுகையில், இதைத் திருடுவதற்கான சிறிய சாத்தியக்கூறு இருந்தால், ரஷ்யர்கள் அதைச் செய்வார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என கூறினார்.
கொரோனா நோய்க்கு 160- க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், 23 தடுப்பூசிகள் மனிதன் மீது மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை ரஷ்யா 26 தடுப்பூசிகளை உருவாக்கி வருவதாக ரஷ்ய துணைப் பிரதமர் டட்டியானா கோலிகோவா தெரிவித்தார். ஆனால், இரண்டு மட்டுமே மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்பட்டுள்ளன. தடுப்பூசிகளில் ஒன்றுக்கு 38 பேர் மீது ஒரு மாத கால சோதனை இந்த வாரம் முடிந்தது.
ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் கிரில் டிமிட்ரிவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆகஸ்ட் மாதத்தில் பல ஆயிரம் மக்களுடன் ஒரு பெரிய சோதனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் ரஷ்யாவில் 30 மில்லியன் டோஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்வோம், அல்லது தேவைப்பட்டால் 50 மில்லியனை உற்பத்தி செய்வோம். அதாவது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்யா தடுப்பூசிகளை முடிக்கும் என்று டிமிட்ரிவ் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.