ரஷ்யாவுக்குள் நுழைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,கனடா பிரதமருக்கு தடை – புடின் அதிரடி உத்தரவு!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 21 நாட்களாக தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளனர்.அதே சமயம்,இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வின் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்கள் மீது ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.
பிற நாடுகள் ஆதரவு:
இதனிடையே,உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா,கனடா உள்ளிட்ட சி;ல நாடுகள் மற்றும் நிறுவனங்கள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
நாட்டிற்குள் நுழைய தடை:
இந்நிலையில்,உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வருவதன் காரணமாக தங்கள் நாட்டிற்குள் நுழைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவுக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. மேலும்,கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலானி ஜோலி உள்ளிட்ட 300 பேர் தங்கள் நாட்டில் நுழைவதற்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.
இதனிடையே,தங்கள் நாட்டில் மேலும் 15 ரஷ்ய அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும்,இதுவரை ரஷ்யாவைச் சேர்ந்த 500 பேருக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
பதிலடி:
மேலும்,அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் தங்கள் நாட்டிற்குள் நுழைய ரஷ்யா தடை விதித்துள்ளது.தடை விதிக்கப்பட்ட பட்டியலில் அவருடன் சேர்த்து அமெரிக்க அதிகாரிகளான பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், சிஐஏ தலைவர் வில்லியம் பர்ன்ஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரும் அதிபர் வேட்பாளருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக,ரஷ்ய அதிகாரிகள் மீது வாஷிங்டன் விதித்த தடைகளுக்கு பதிலடியாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.