RSS பிரமுகர் படுகொலை..கேரள முதலமைச்சர் மற்றும் டிஜிபி-யிடம் ஆளுநர் நேரில் விளக்கம் கேட்டதால் சர்ச்சை.
திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் RSS பிரமுகர் ராஜேஷ் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து முதலமைச்சர் பினராயி விஜயனையும், கேரள மாநில டிஜிபி-யையும் கவர்னர் சதாசிவம் நேரில் அழைத்து விளக்கம் கேட்டது குறித்து கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று பாஜக சார்பில் கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொல்லப்பட்டது தொடர்பாக பினராயி விஜயனை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, கேரளா வில் அரசியல் வன்முறை பெருமளவில் அரங்கேறி வருவது குறித்து அவர் கவலை தெரிவித்தாக கூறப்படுகிறது.
இத்தகைய செயலில் ஈடுபடுவோரை உடனடியாகக் கைது செய்து நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கேரள முதலமைச்சரை ராஜ்நாத் சிங்கேட்டுக்கொண்டார்.
இந்த கொலை தொடர்பாக RSS-BJPயை சேர்ந்த 7 பேரை திருவனந்தபுரம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனையும், அம்மாநில டிஜிபி-யையும் நேரில் அழைத்த ஆளுநர் சதாசிவம், இது குறித்து விளக்கம் கேட்டுள்ளார்.
இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியினர், ஒரு கொலை தொடர்பாக மாநில முதலமைச்சரை ஆளுநர் நேரில் அழைத்து விளக்கம் கேட்பது நடைமுறையில் இல்லாதது என்றும், பாஜக எதேச்சதிகாரத்தைப் பயன்படுத்தி பாஜக அல்லாத மாநிலங்களை மிரட்டி வருவதாகவும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.