‘ரிஷி கபூர் மறைவு – ரஜினி இரங்கல்’
பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் (வயது 67) ஏப்ரல் 29 ஆம் தேதி உடல் நலக்குறைவால், மும்பையில் உள்ள சர் ஹெச்.என்.ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே ரிஷி கபூருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக நியூயார்க் சென்றிருந்தார். அவர் தனது மனைவி நடிகை, நீது கபூருடன் கிட்டத்தட்ட ஒரு வருடம் அங்கேயே தங்கி 2019 செப்டம்பரில் மும்பைக்கு திரும்பினார். புகழ்பெற்ற நடிகர் ராஜ் கபூரின் மகன் தான் ரிஷி கபூர். ஸ்ரீ 420 என்ற படத்தில் தனது 3 வயதில் நடிப்பை தொடங்கினார். 1973 ஆம் ஆண்டில் ‘பாபி’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்காக 1974 ஆம் ஆண்டு சிறந்த நடிகர் என்ற விருதையும் பெற்றார்.
இதையடுத்து ராஜ் கபூர் இயக்கிய, ’மேரா நாம் ஜோக்கர்’ படத்தில் முதல் முறையாக ஹீரோவாக அறிமுகமானார். ரிஷி கபூருக்கு அவரது மனைவி நீது கபூர், மற்றும் பிள்ளைகள் ரன்பீர் கபூர் மற்றும் ரித்திமா கபூர் ஆகியோர் உள்ளனர். ரிஷி கபூர் கடைசியாக ’தி பாடி’ படத்தில், இம்ரான் ஹாஷ்மியுடன் நடித்தார் என்பது குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் இருந்த ரிஷி கபூருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ரிஷி கபூரின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், என்னுடைய மிக நெருங்கிய நண்பர் ரிஷி கபூரின் மறைவால் எனது இதயம் உடைந்து விட்டது என்றும் அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
Heartbroken … Rest In Peace … my dearest friend #RishiKapoor
— Rajinikanth (@rajinikanth) April 30, 2020