குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தீவிரம்!
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி ஹெலிகாப்டர் மூலம் நடைபெற்று வருவதாக, தெரிவித்தார்.
தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில், ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீயில், அங்கு மலையேற்றத்திற்காகவும், சுற்றுலாக்காகவும் சென்ற மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சிக்கினர். காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்க கோவை மாவட்டம் சூலூரிலிருந்து விமானப்படை ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
காட்டுத்தீ விபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்ததாக தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். இவர்களுள் சென்னையை சேர்ந்தவர்கள் 6 பேர் என்பதும், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 3 பேர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் கூறியதாவத:
“நள்ளிரவு 3 மணிக்கு 16 கமாண்டோக்கள் குரங்கணி மலைப்பகுதிக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு உதவினர். இரவு நேரத்தில் சிலர் மீட்கப்பட்டனர். தற்போது, காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மலைப்பகுதியிலிருந்து உடல்களை கீழே கொண்டு வருவதில் 2 ஹெலிகாப்டர்களும், தீயை அணைப்பதில் ஒரு ஹெலிகாப்டரும் ஈடுபட்டுள்ளன. மலை செங்குத்தாக இருப்பதால் கீழே இறங்கி மீட்பு பணி மற்றும் காப்பாற்றுவதில் சிறிது சிரமம் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.