“கொரோனாவுக்கான மருந்தை தயாரிக்க சீனாவுடன் இணைய தயாரா?” செய்தியாளரின் கேள்விக்கு டிரம்ப் அதிரடி பதில்!
வெற்றிகரமாக கொரோனா தடுப்பு மருந்தை தயார் செய்ய சீனா உட்பட எந்த நாடாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்ற தயார் என செய்தியாளரின் கேள்விக்கு அதிபர் ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், தற்பொழுது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சித்து வருகிறது.மேலும் கொரோனா பரவலை தடுக்க, பல நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து வருகிறது.
அந்தவகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் செய்தியாளர் ஒருவர், “கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்க சீனாவுடன் இணைய தயாரா” என கேள்வி எழுப்பினார். அதற்கு டிரம்ப், வெற்றிகரமாக கொரோனா தடுப்பு மருந்தை தயார் செய்ய சீனா உட்பட எந்த நாடாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்ற தயார் என தெரிவித்துள்ளார்.
மேலும், நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை வளர்ச்சியில் அமெரிக்கா சிறப்பாக செயல்படுகிறது எனவும், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கு அமெரிக்கா முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், விரைவில் அமெரிக்க ராணுவம் அதனை விநியோகம் செய்யும் என அந்த பேட்டியில் தெரிவித்தார்.
கொரோனாவுக்கு நோய்க்கு எதிராக, இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த மருந்தின் சோதனை முடிவில் கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பதாகவும், மருந்தின் சோதனை வெற்றி அடைந்துள்ளதாகவும் அவர்கள் நடத்திய சோதனை முடிவில் தெரிவித்துள்ளனர்.