ரஜினியின் புதிய நடிப்பின் பெயர் அரசியல்வாதியாம்!அரசியல்வாதி கதாபாத்திரத்தையும் சிறப்பாகச் செய்வேன் என்று ரஜினி உறுதி …..
நடிகர் ரஜினிகாந்த் கடவுள் எனக்குக் கொடுத்துள்ள புதிய பாத்திரம் அரசியல்வாதி என்றும் அதையும் சிறப்பாகச் செய்வேன் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
தனது அரசியல் பிரவேசத்துக்கு மத்தியில் இமயமலைக்கு 15 நாட்கள் ஆன்மீகப் பயணமாக சென்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அங்கு இமாச்சலப் பிரதேசம், ஜம்மு உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று புனிதத் தலங்களை வழிபட்டார்.
இன்று அவர் உத்தரகண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷில் தங்கியுள்ளார். அப்போது மீடியாக்கள் பல அவரிடம் கேள்விகளை எழுப்பின. ஆனால் அவர்களிடம் அரசியல் தொடர்பாக எதுவும் பேச மறுத்துவிட்டார் ரஜினி.
பின்னர் வட இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த சில நிமிட சுருக்கமான பேட்டியில், ‘ஒரு மனிதன் தன்னைத் தானே தேடி உணர்வதுதான் அந்தப் பிறவியின் முக்கிய வேலை. அதற்காகத்தான் நான் இங்கே வந்துள்ளேன்.
நிறைய தியானம், ஆன்மீகப் புத்தகங்கள் படிப்பது, எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக மக்களைச் சந்திப்பது போன்றவற்றுக்காகத்தான் இங்கே வந்திருக்கிறேன். அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் யாரும் இங்கே எனக்குத் தேவையில்லை. மக்கள், இயற்கை போதும்.
தமிழகத்தில் என்னால் சுதந்திரமாக நடமாட முடியாது. ஆனால் இமயமலையில் முன்பெல்லாம் நான் சுதந்திரமாக இருந்தேன். ஆனால் இனி இங்கும் (இமயமலை) அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிந்து கொண்டேன்.
ஒரு நடிகனாக என் வேலையை சரியாகவே செய்துவிட்டதாக உணர்கிறேன். இப்போது அரசியல்வாதி என்ற புதிய பாத்திரத்தைக் கொடுத்துள்ளான் இறைவன். அதையும் சிறப்பாக செய்வேன் என நம்புகிறேன். இந்தப் பயணத்துக்குப் பின் ஒரு அரசியல்வாதியாக நான் என்ன செய்யப் போகிறேன் என்பதைப் பார்க்கப் போகிறீர்கள்,’ என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.