லியோ திரைப்பட அதிகாலை காட்சிக்கு அனுமதி கேட்டு தயாரிப்பு நிறுவனம் வழக்கு!
நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்திற்கு தமிழகத்தில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு அப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கி இருந்தது தமிழ்நாடு அரசு. அதன்படி, லியோ திரைப்படத்திற்கு அக்19-ம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை சிறப்பு காட்சிகள் உண்டு எனவும், 19-ஆம் தேதி மட்டும் 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளும் மற்ற நாட்களில் காலை 7 மணி சிறப்பு காட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து, காலை 9 மணிக்கு தொடங்க முதல் காட்சியை தொடங்க வேண்டும் என தமிழக அரசு புதிய அரசாணையை வெளயிட்டது. அதன்படி, காலை 9 மணிக்கு தான் சிறப்பு காட்சி தொடங்க வேண்டும் என்றும், நள்ளிரவு 1:30க்குள் அனைத்து காட்சிகளும் முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
மேலும், சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயப்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது.
மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ நிறுவனம் மேல் முறையீடு செய்துள்ளாது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மதியம் 1 மணிக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வருகிறது.
லியோ
விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார். படம் வெளியாக இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், ப்ரோமஷன் பணிகள் ஒரு பக்கம் நடக்க, மறுபக்கம் படத்தின் டிக்கெட் புக்கிங் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.