லாரி மோதி விபத்தில் சிக்கிய பிரபாஸின் ‘சலார்’ படக்குழுவினர்.!
பிரபாஸ் நடித்து வரும் சலார் படக்குழுவினர் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகுபலி திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ். ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை அடுத்து நாக் அஸ்வின் இயக்கத்தில் தனது 21-வது படமாக உருவாகும் படத்தில் தீபிகா படுகோன் உடன் இணைந்து நடிக்கிறார்.
இதையடுத்து தன்ஹாஜி பட இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.ஆதிபுருஷ் படத்தினை தொடர்ந்து கேஜிஎஃப் பட இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் சலார் படத்தில் நடிக்கவுள்ளார்.இதில் ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் பெரிய செட்டுகள் அமைத்து நடைபெற்று வந்த போது அங்கு தீ விபத்து ஏற்பட்டதும் ,அதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதன் அதிர்ச்சியிலிருந்தே வெளிவராத பிரபாஸூக்கு அடுத்த அதிர்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது.அதாவது பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கும் சலார் படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா மற்றும் மும்பை பகுதிகளில் நடைபெற்று வந்தது . இந்த நிலையில் படப்பிடிப்பை முடித்து தங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்த படக்குழுவினரின் வேன் லாரியில் மோதி விபத்தில் சிக்கியுள்ளது.இதில் காயமடைந்த படக்குழுவினர் தற்போது அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது