பொங்கல் சிறப்பு வாழையும் , கரும்பும் …!!
பொங்கலுக்கு சிறப்பு என்றால் அது கரும்பும் வாழையும்தான். பொங்கலுக்கு இரண்டு நாளுக்கு முன்பே அனைவரும் வீடுகளில் ‘கொடாப்பு’ போடுவார்கள். கொடாப்பு என்பது வாழைத்தாரை (வாழைப் பழம்) பழுக்க வைப்பதுதான்.முந்தைய காலத்தில் ஏன் இன்னும் பல கிராமங்களில் வீட்டிலே வாழை மரம் உண்டு என்பதால். வாழைத் தாரை யாரும் கடையில் வாங்குவதில்லை.
கடையில் வாங்கிய வாழைத்தாரை தரையில் பள்ளம் தோண்டி, சுற்றிலும் வாழை சருகைக் (காய்ந்த வாழை இலை) வைத்து, அதில் நடுவில் வாழைக்காயை வைத்து, மேலே வாழைச் சருகை பரப்பி, ஒரு பானையை கவிழ்த்தாற்போல் வைத்து மண்ணை கொண்டு மூடி மொழுகி விடுவார்கள். இப்போது மண் பாணையின் சிறு பகுதி மட்டும் வெளியில் தெரியும். அதில் ஒரு ஓட்டையைப் போட்டு நெறுப்பு வைத்து காலையிலும், மாலையிலும் ஊதுவார்கள். அந்த மண் பாணை முழுவதும் வாழைச் சருகு இருக்கும். அதனால் நெறுப்புக் கொண்டு ஊத..ஊத புகை உள்ளே பரவி காயை பழுக்கவைக்கும். இரண்டு நாள் கழித்து கொடாப்பை பிரித்தால் வாழைக்காய் செங்காயாக பழுத்து இருக்கும். எடுத்து கொடியில் அடுக்கி விட்டால் பொங்கல் அன்று காலையில் பழம் பழுத்து விடும். பொங்கலுக்கு எல்லோர் வீட்டிலும் வாழை பழம் கிடைக்கும்…