ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கி சூடு..! பிரதமர் மோடி கடும் கண்டனம்.!
சென்னை : ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீதான துப்பாக்கி சூட்டிற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவில், உள்ள ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ நேற்று ஹேண்ட்லோவா எனுமிடத்தில் பிரச்சார கூட்டத்தில் பேசுகையில் , மர்ம நபரால் சுடப்பட்டார். 5 முறை அவர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு, ஹேண்ட்லோவா பகுதி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவர் தற்போது அபாய கட்டத்தை கடந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர் ஃபிகோ மீதான துப்பாக்கி சூட்டிற்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
பிரதமர் மோடியும் தனது எக்ஸ் சமுக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோழைத்தனமான மற்றும் கொடூரமான செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஃபிகோ விரைவில் குணமடைய வேண்டும் எனவும், ஸ்லோவாக் நாட்டு மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.