ஓமனில் பிரதமர் மோடி பெருமிதம்!
மஸ்கட்டில் இந்திய வம்சாவளியினரிடையே உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, பாஜக அரசு மீது எந்த ஒரு ஊழல் புகாரும் இல்லை என்று, பெருமிதத்துடன் தெரிவித்தார். ஓமன் தலைநகர் மஸ்கட் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, அங்கு வசிக்கும் இந்தியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுல்தான் கபூஸ் விளையாட்டு வளாகத்தைச் சுற்றி, திறந்தவெளி வாகனத்தில் ஏறி வலம் வந்த மோடிக்கு அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கரவொலி எழுப்பி வரவேற்பு தெரிவித்தனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, உலக நாடுகள் மத்தியில் இந்தியா மீதான நம்பிக்கை வளர்ந்திருப்பதாக கூறினார். ஓமனில் வசிக்கும் இந்தியர்களின் பிரச்சினைகள் குறித்து ஓமன் நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிரதமர் தெரிவித்தார். சுமார் 90 லட்சம் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் பணியாற்றி வருவதாக தெரிவித்த அவர், தமது அரசு வெளிநாடுகளில் துன்பத்தில் சிக்கிய இந்தியர்களை தாய்நாடு அழைத்து வருவதில் சீரிய பணியாற்றி வருவதாக கூறினார். நேர்மையான நல்லாட்சியைத் தர, தாம் அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளதாக கூறிய மோடி, பாஜக அரசு மீது இதுவரை ஒரு ஊழல் புகார் கூட எழவில்லை என்று தெரிவித்தார்.
பின்னர், ஓமன் சுல்தான் சையத் காபூசை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாட்டுத் தலைவர்கள் முன்னிலையில், அறிவியல், சுற்றுலா, சுகாதாரம், பாதுகாப்பு தொடர்பான எட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.