அதிர்ச்சி ! 533 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தொலைபேசி எண்களை வெளியிட்ட ஹேக்கர்கள்!
பேஸ்புக் பயன்படுத்துவோரின் 533 மில்லியன் பயனர்களின் தொலைபேசி எண்கள், பிறந்த நாள், இருப்பிடங்கள் மற்றும் முழு பெயர்கள் ஹேக்கர்களால் வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளியாகியுள்ள தரவுகளில் 106 நாடுகளைச் சேர்ந்த 533 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கும். இதில் இந்தியாவை சேர்ந்த சுமார் 6 மில்லியன் பயனர்களின் பதிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. அது தவிர அமெரிக்காவை சேர்ந்த 32 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் தரவுகள், மற்றும் இங்கிலாந்தில் 11 மில்லியன் பயனர்கள் தகவல்கள் அடங்கும்.
இவ்வாறு வெளியாகியுள்ள தரவுகளை பிசினஸ் இன்சைடரின் ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. கசிந்த தனிப்பட்ட தகவல்களில் தொலைபேசி எண்கள், பேஸ்புக் ஐடிகள், இருப்பிடங்கள், பிறந்த தேதிகள், முழு பெயர்கள், பயாஸ் மற்றும் சில பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள் ஆகியவை அடங்கும்.
பழைய தரவு ஆனாலும் எச்சரிக்கை தேவை :
இப்பொழுது வெளியாகியுள்ள தரவுகள் 2019 ஆம் ஆண்டு வெளியான பழைய தரவுகள் அவை சரிசெய்யப்பட்டுவிட்டது என்று பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் இன்சைடர் இணையதளத்திற்கு தெரிவித்திருந்தார். இதில் மூன்று பேஸ்புக் நிறுவனர்களான மார்க் ஜுக்கர்பெர்க், கிறிஸ் ஹியூஸ் மற்றும் டஸ்டின் மொஸ்கோவிட்ஸ் ஆகியோரின் தனிப்பட்ட தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்களைக் கண்டுபிடிக்க 2019 ஆம் ஆண்டில் தரவு ஒரு தேடலுக்கு $20 இலவசமாக டெலிகிராமில் விற்கப்பட்டது. இது 2021 ஜனவரியில் மீண்டும் கசிந்தது.
இப்பொழுது வெளியாகியுள்ள தரவுகள் சற்று பழையதாக இருந்தாலும், பயனர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் மின்னஞ்சல் ஐடி அல்லது தங்கள் கணக்குடன் தொடர்புடைய தொலைபேசி எண்ணை மாற்றுவதற்கான அதிக வாய்ப்பு இல்லாததால், இது மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டியதாக உள்ளது.
ஹேக்கர்கள் தாக்கலாம்:
சைபர் கிரைம் புலனாய்வு நிறுவனமான ஹட்சன் ராக் நிறுவனத்தின் சி.இ.ஓ அலோன் கால் ஒரு ட்வீட்டில் இதனை வெளிப்படுத்தியுள்ளார். 533 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளன, இவை ஹேக்கர்கள் ஹேக்கிங் முயற்சிகள் அல்லது பல கட்ட இணையவழி தாக்குதலுக்கு வழி வகை செய்யும் என்று தெரிவித்துள்ளார்.