பாகிஸ்தான் விமான விபத்து: கொரோனா நிலைமை குறித்து விவாதித்த விமானிகள் “கவனம் செலுத்தவில்லை” என அமைச்சர் குற்றசாற்று
கடந்த மாதம் விபத்துக்குள்ளான பிஐஏ விமானத்தின் விமானிகள், விமானம் இயக்குவதில் கவனம் செலுத்தவில்லை எனவும், விமானம் இயக்கம் போது கொரோனா வைரஸ் குறித்து விவாதித்ததாக பாகிஸ்தான் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாகிஸ்தான், லாகூரிலிருந்து கராச்சியை நோக்கி மே மாதம் 23 ஆம் தேதி பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான PK-8303 விமானம் புறப்பட்டது. அந்த விமானம், கராச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே வந்தபோது, திடீரென விமான நிலையத்திற்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள கட்டடங்களுக்கு இடையே விழுந்து, தீப்பிடித்து எரிந்து விபத்துக்குளானது.
அந்த கோர விபத்தில் 91 பயணிகள், 8 ஊழியர்கள் என மொத்தம் 99 பேர் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக, 2 பேர் அந்த விபத்தில் இருந்து சிறு காயங்களுடன் தப்பினர். அவர்களை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த விமான விபத்து குறித்து விமானத்துறை அமைச்சர், விமானிகள் அதிக தன்னம்பிக்கை கொண்டவர்கள் என விமான போக்குவரத்து அமைச்சர் குற்றம் சாற்றினார். அவர்கள் உரிய நடைமுறையை பின்பற்றவில்லை எனவும் விமானம் பறக்க 100 சதவீதம் பொருத்தமானது, தொழில்நுட்பக் குறைபாடு எதுவும் இல்லை என அமைச்சர் கூறினார்.
மேலும் இந்த விமான விபத்து குறித்த இறுதி விசாரணை அறிக்கை, இன்னும் ஒரு வருட காலத்திற்குள் முழுமையான சமர்ப்பிக்கப்படும் என உறுதியளித்தார். அதுமட்டுமின்றி, விமானத்தை தரையிறக்க முயன்றபோது, விமானிகள் கொரோனா வைரஸ் குறித்து விவாதித்து வருவதாக அவர் கூறினார்.
பைலட் மற்றும் கோ-பைலட் விமானத்தை இயக்குவதில் கவனம் செலுத்தவில்லை. அவர்களின் உரையாடல் முழுவதும் கொரோனா வைரஸைப் பற்றியதாக இருந்ததாக கூறினார். விமானம் தரையிறங்கும் நிலையில் இருந்தபோது, அவர்களை கட்டுப்பாட்டாளர் எச்சரித்தார். ஆனால் விமானி, “நான் பார்த்துக்கொள்கிறேன்” என கூறி, மீண்டும் அவர்கள் கொரோனாவைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினர். விமானிகளின் இந்த அலட்சியமே விமானம் விபத்துக்குள்ளாகி, 99 பேர் உயிரை காவுவாங்கியதாக விமான போக்குவரத்துக்குத்துறை அமைச்சர் ஹஸான் நாஸிர் ஜாமிர் தெரிவித்துள்ளார்.