சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை போட்டுக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர்!
கொரோனாக்கு எதிரான தடுப்பூசியை போட மக்கள் தயக்கம் காட்டி வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீனாவின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டார்.
சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் குறையதொடங்கிய நிலையில், தற்பொழுது மீண்டும் பரவத்தொடங்கியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் இந்தியா, ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், உலகளவில் பல நாடுகளில் போடப்பட்டு வருகிறது.
அந்தவகையில், பாகிஸ்தான் நாட்டில் 6.15 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக சீனா, தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளின் 5 லட்சம் டோஸ்களை கடந்த பிப்ரவரி மாதம் நன்கொடையாக வழங்கியது. இதனால் பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.
அந்நாட்டில் சீன தடுப்பூசியை தவிர, ஆஸ்டிரோஜெனிகா மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றனர். முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போட்டு வந்த நிலையில், கடந்த 10-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. தற்பொழுது தடுப்பூசி போட மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சினோபார்ம் தடுப்பூசியை போடும் இரண்டாம் கட்ட பணிகள், ராவல்பிண்டி நகரில் உள்ள நூர் கான் விமான தளத்திற்கு வந்தடைந்தது. இதனைதொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீனாவின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். இது, மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.