100 -க்கும் மேற்பட்ட பாடப்புத்தகங்களை பாகிஸ்தான் தடை செய்தது.!
பாகிஸ்தானில் பள்ளிகளில் கற்பிக்கப்பட்ட 100 -க்கும் மேற்பட்ட பாடப்புத்தகங்களை பாகிஸ்தானின் பஞ்சாப் அரசு தடை செய்துள்ளது.
சில புத்தகங்களில் பாகிஸ்தானின் நிறுவனர் ‘காயிட்-இ-ஆசாம்’ முஹம்மது அலி ஜின்னா மற்றும் தேசிய கவிஞர் அல்லாமா முஹம்மது இக்பால் பிறந்த சரியான தேதியைக் கூட அச்சிடவில்லை என பஞ்சாப் பாடத்திட்டம் மற்றும் பாடநூல் வாரியம் நிர்வாக இயக்குனர் ராய் மன்சூர் நசீர் கூறினார்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கச்கூடிய சுமார் 10,000 புத்தகங்கள் 30 குழுக்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்று நசீர் கூறினார். ஆய்வு செய்த அந்த குழுக்களின் பரிந்துரையின் பேரில் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், லிங்க் இன்டர்நேஷனல் பாக்கிஸ்தான், பாராகான் புக்ஸ் ஆகியவற்றால் வெளியிடப்பட்ட 100- க்கும் மேற்பட்ட புத்தகங்களை தடைசெய்யப்பட்டுள்ளன.
தடைசெய்யப்பட்ட புத்தகங்களில் அவதூறான மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு உள்ளடக்கம் இருந்தது என்று அவர் கூறினார். இந்த புத்தகங்களை சந்தையில் இருந்து பறிமுதல் செய்ய வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட வேண்டிய புத்தகத்தில் இருந்த உள்ளடக்கத்தை அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது.
அடுத்த ஆறு மாதங்களுக்குள் மற்ற பாடப்புத்தகங்களை முழுமையாக ஆய்வு செய்வோம் என்றார்.மேலும் புத்தகங்களை வெளியிடுவதையும் விற்பதையும் நிறுத்துமாறு வெளியீட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கடந்த மாதம், பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளர் லெஸ்லி ஹாஸ்லெட்டனின் இரண்டு புத்தகங்களை அவதூறான உள்ளடக்கம் கொண்டதாகக் தடை விதித்தது. என்பது குறிப்பிடத்தக்கது.